சர்வதேச ஆலோசனைப் பொறியாளர்களின் கூட்டமைப்பு (FIDIC), அதன் மதிப்புமிக்க திட்ட விருதுகள் 2022க்கான ‘அடல் சுரங்கப்பாதை’யை பட்டியலிட்டுள்ளது. இதன் மூலம், மணாலி – லே நெடுஞ்சாலையில் 10,000 அடி உயரத்தில், ரோஹ்தாங் பாசுக்கு அடியில் போடப்பட்டுள்ள 9.02 கி.மீ நீளமுள்ள, பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த அடல் சுரங்கப்பாதையை நிறுவிய பாரதத்தின் எல்லைச் சாலைகள் அமைப்பு (BRO) மீண்டும் ஒருமுறை உலக அரங்கில் தன்னை நிரூபித்துள்ளது. உலகெங்கிலும் உள்ள சமூக, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் வாழ்க்கைத் தரத்தில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தும் பொறியியல் உள்கட்டமைப்பின் சாதனைகள் மற்றும் வெற்றிகளை இந்த விருது எடுத்துக்காட்டுகிறது. இதற்கான அனைத்து விருதுகள் சமர்ப்பிப்புகளையும் பரிசீலித்த பிறகு, விருதுகள் நடுவர் குழு FIDIC திட்ட விருதுகள் 2022க்கான 28 திட்டங்களை உள்ளடக்கிய ஒரு பட்டியலை வெளியிட்டது. இந்தத் திட்டங்கள் பாரதம், பிரான்ஸ், வியட்நாம், சீனா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, உள்ளிட்ட 11 நாடுகளில் இருந்து எடுக்கப்பட்ட சர்வதேச தேர்வாகும். ஸ்விட்சர்லாந்தின் ஜெனீவாவில் செப்டம்பர் 12, 2022 அன்று FIDIC யின் உலகளாவிய உள்கட்டமைப்பு மாநாட்டின் போது, இவ்வாண்டு விருதுகளின் வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவார்கள். முன்னதாக, அடல் சுரங்கப்பாதை டெல்லியில் இந்திய கட்டிட காங்கிரஸ் (IBC) ‘சிறந்த உள்கட்டமைப்பு திட்டம்’ விருதை ஏற்கனவே பெற்றுள்ளதுடன் ‘உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதை’ என உலக சாதனை புத்தகத்தால் அதிகாரப்பூர்வமாக சான்றளிக்கப்பட்டுள்ளது. ‘அடல் சுரங்கப்பாதை பணிக்காக உலகமே எல்லைச் சாலைகள் அமைப்பை பாராட்டுகிறது’ என பி.ஆர்.ஓ’வின் சீரிய முயற்சிகளை பாரத பாதுகாப்பு செயலாளர் டாக்டர் அஜய் குமார் பாராட்டியுள்ளார்.