மேற்கு வங்க மாநிலம், மோமின்பூரில் கடந்த அக்டோபர் 9ம் தேதி லட்சுமி பூஜையை முன்னிட்டு கூடியிருந்த ஹிந்துக்கள் மீதும் அந்த பகுதியை சுற்றியுள்ள ஹிந்துக்கள் மீதும் திட்டமிட்ட ரீதியில் வன்முறை நடத்தப்பட்டது. இந்த ஹிந்து எதிர்ப்பு கலவரத்தில், மயூர்பஞ்ச் பகுதியில் பல வீடுகள் சூறையாடப்பட்டன, பல வாகனங்கள் தீயிட்டு அழிக்கப்பட்டன. பலர் படுகாயமடைந்தனர். இந்த வன்முறையில் மாநில காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் மௌனம் சாதிப்பதாகக் கூறி பாதிக்கப்பட்டவர்கள் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தை அணுகினர். மேலும், இந்த வன்முறையையடுத்து மாநிலத்தில் அமைதியைக் காக்க மத்திய துணை ராணுவப் படைகளை அனுப்ப வேண்டும். காவல்துறை மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை எனவும் மனுதாரர்கள் கோரிக்கை வைத்தனர். இதனை விசாரித்த நீதிமன்றம், குற்றத்தின் தீவிரத்தன்மை மற்றும் பிற தொடர்புடைய காரணிகளைக் கருத்தில் கொண்டு, இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) விசாரிக்கலாமா என்பதை மத்திய அரசு முடிவு செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது. இதனையடுத்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் தீவிரவாத எதிர்ப்பு (சி.டி.சி.ஆர்) பிரிவு உத்தரவிட்டதன் பேரில் என்.ஐ.ஏ இவ்வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்து விசாரணையை துவக்கியுள்ளது. இந்த வழக்கில் ஏற்கனவே 42 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து நடத்தப்பட்ட சோதனைகளில் 15 வெடிகுண்டுகள், 4 நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் பல்வேறு பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.