1. சகோதரி நிவேதிதா அக்டோபர் 28, 1867 ஆம் ஆண்டு அயர்லாந்தின் வடபகுதி மாகாணம் டைரோனில் உள்ள டங்கனன் எனும் ஊரில் பிறந்தார்.
2. இயற்பெயர் மார்கரெட் எலிசபெத் நோபல், இவர் சுவாமி விவேகானந்தரின் முதன்மை சீடர்.
3. ஆங்கில-ஐரியப் பெண்ணான இவர் 1895 ஆம் ஆண்டில் இலண்டனில் விவேகானந்தரை சந்தித்து அவருடைய கொள்கைகளால் கவர்ந்திழுக்கப்பட்டு 1898 ஆம் ஆண்டு ஜனவரி 28 ல் இந்தியாவில் கல்கத்தா நகருக்கு வந்தார். நிவேதிதையை வரவேற்க சுவாமி விவேகானந்தரே துறைமுகத்திற்குச் சென்றிருந்தார்.
4. மார்ச் 28, 1898 ஆம் ஆண்டு பிரம்மச்சரிய தீட்சைக் கொடுக்கும்போது விவேகானந்தர் தெய்வத்திற்கு அர்ப்பணிப்பு எனும் பொருள்படும் நிவேதிதா என்ற பெயரை அளித்தார்.
5. இவ்வாறு இந்து சமயத்தில் தீட்சை வழங்கப்பட்ட முதல் மேற்கத்திய பெண் இவர்.
6. 1898, நவம்பர் 13 ஆம் நாள், எண் 16, போஸ்பாரா தெருவில் அமைந்துள்ள வீட்டில் பெண்களுக்கான பள்ளி திறக்கப்பட்டது. காளி பூஜையன்று அன்னை சாரதா தேவி பள்ளியைத் திறந்து வைத்தார். ’அன்னையின் ஆசியை விட வேறு நல்ல சகுனத்தை என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. எதிர்காலத்தில் சிறந்து விளங்கப்போகும் படித்த பெண்ணினத்திற்கு இதைவிட நல்ல சகுனம் ஏதும் இருக்க முடியாது’ என்று தமது கடிதத்தில் எழுதுயுள்ளார் நிவேதிதை.
7. பள்ளி நடத்துவதற்கான செலவை புத்தகம் எழுதி அதில் வரும் தொகை கொண்டு சமாளித்தார் நிவேதிதை. இங்கிலாந்து மற்றும் அமெரிக்க நண்பர்களும் உதவினர். மிசஸ் புல் என்பவர் பெருமளவு உதவினார்.
8. நிவேதிதையின் மறைவுக்குப் பின்னரும் அன்னை சாரதா தேவி இப்பள்ளி தொடர்ந்து நடைபெறச் செய்தார்.
9. சுவாமி விவேகானந்தர், மார்ச் மாதத்தில் கல்கத்தா மக்களை தாக்கிய கொள்ளை நோயின் நிவாரணப் பணி செய்ய அமைத்த குழுவிற்கு நிவேதிதையை தலைவியாக்கினார். நிவேதிதை நோயாளிகளைப் பராமரிக்கவும் நகரைத் தூய்மைப் படுத்தவும் இளைஞர் குழு ஒன்றையும் அமைத்து தொண்டாற்றினார்.