ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ், தனது டுவிட்டர் பக்கத்தில், “பாரதத்துடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான தீர்மானம் ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதேபோல், இங்கிலாந்து உடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்திற்கும் ஆஸ்திரேலிய நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கி உள்ளது. இது நிறைவேறியதை அடுத்து, செனட் சபையும் இதற்கு சட்ட அங்கீகாரம் அளித்துள்ளது. எனினும், இந்த ஒப்பந்தத்திற்கு பாரத நாடாளுமன்றத்திலும், இங்கிலாந்து நாடாளுமன்றத்திலும் இன்னும் ஒப்புதல் பெறப்படவில்லை. ஆனால், அதேசமயம், ஆஸ்திரேலியா உடன் தடையற்ற வர்த்தக
ஒப்பந்தம் மேற்கொள்வதற்கு பாரத அரசு வலிமையான உறுதிப்பாட்டை நிரூபித்துள்ளது” என தெரிவித்துள்ளார். முன்னதாக, கடந்தவாரம் இந்தோனேசியாவில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டின்போது பிரதமர் நரேந்திர மோடியுடன் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் இந்த ஒப்பந்தம் குறித்து விவாதித்தார். ஒப்பந்தம் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க வரும் மார்ச் மாதம் பாரதம் வர இருப்பதாக கூறியிருந்தார். சீனா உடனான ஆஸ்திரேலியாவின் பிரச்சனைகள் நிறைந்த உறவு காரணத்தால், அந்நாட்டிற்கு ஏற்றுமதி இறக்குமதிகள் மிகவும் சிக்கலாக உள்ளது. இதனால், இந்த ஒப்பந்தம் ஆஸ்திரேலியாவுக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.