1. கரியமாணிக்கம் ஸ்ரீனிவாச கிருஷ்ணன் 1898 டிசம்பர் 4ம் தேதி தமிழகத்தில் பிறந்தார். ஆரம்பக் கல்வியைச் சென்னையில் படித்தார். 1920 ல் கல்கத்தா சென்றார். இன்டியன் அசோஷியேஷன் பார் கல்ட்டிவேஷன் ஆப் சயின்ஸ் அமைப்பில் சேர்ந்தார். அங்கு விஞ்ஞானி சி.வி.ராமனுக்குக் கீழே வேலை பார்த்தார். ராமனின் கண்ணொளி தொடர்பான ஆய்வுகளில் அவர் உதவியாளராகப் பணியாற்றினார்.
2. கிருஷ்ணன் விஞ்ஞானி மட்டுமல்ல. அவர் ஒரு இயற்பியல் தத்துவவாதி. இயற்பியல் துறையைப் போலவே சமஸ்கிருதம், ஆங்கிலம் மற்றும் தமிழ் இலக்கியங்களிலும் தேர்ச்சி பெற்றிருந்தார்.
3. சி.வி. ராமன், ‘ராமன் விளைவை’க் கண்டுபிடிக்க பெரிதும் உதவியாக இருந்தவர் கிருஷ்ணன். 1948 ல் புதுடில்லியில் உள்ள நேஷனல் பிசிக்கல் லேபரட்டரியின் முதல் இயக்குனரானார். “இயற்பியல் என்றால் உண்மைகளை எதிர்கொள்வது என்று அர்த்தம்” என கிருஷ்ணன் அடிக்கடி தனது மாணவர்களிடம் கூறுவார்.
4. இயற்பியலின் பல்வேறு பிரிவுகளில் பங்களித்தார். படிக கற்கள் அழகான ஒழுங்கமைப்பில் உள்ளன. இதற்குக் காரணம் அவற்றில் உள்ள அணுக்கள் அல்லது மாலிக்யூல்கள்தான். எந்த ஒரு திடப்பொருளும் அணுக்கள் அல்லது மாலிக்யூல்களின் அமைப்புக்கு தகுந்தபடியான வடிவங்களைத்தான் பெறுகின்றன. திடப்பொருள்களில் அணுக்கள் அல்லது மாலிக்யூல்களின் ஒழுங்கமைப்பு எப்படி உள்ளது? அவற்றுக்கு இடையே இயங்கக் கூடிய சக்தி எப்படி இயங்குகிறது? என்பது குறித்து கிருஷ்ணன் ஆய்வு செய்தார்.
5. தெர்மோனிக்ஸ் துறையில் கிருஷ்ணனின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. வெப்பம் உமிழும் பொருளில் இருந்து வெளியேறும் எலக்ட்ரான்கள், அவற்றின் இயல்பு மற்றும் கட்டுப்பாடுகள் குறித்த ஆய்வு தெர்மோனிக்ஸ் எனப்படும். இரும்பு ராடுகள், காயில்கள் போன்ற பல்வேறு வடிவங்களில் உள்ள திடப்பொருட்கள் வெற்றிடத்தில் சூடுபடுத்தப்படும் போது, வெப்பம் அந்தப் பொருட்களில் எப்படி பரவுகிறது என்பது குறித்தும் ஆய்வு செய்தார்.
6. கிருஷ்ணன் 1940-ல் ராயல் சொசைட்டியில் அங்கத்தினராகத் தேர்வு செய்யப்பட்டார். இயற்பியல் துறையில் மிக முக்கியமான பங்காற்றிய விஞ்ஞானி கிருஷ்ணன் 1961-ல் இறந்தார்.