கோயில்களில் அலைபேசிக்கு தடை

0
281

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்கள் அபிஷேகம், பூஜை ஆகியவற்றை தங்களது அலைபேசிகளில் பதிவு செய்கின்றனர்.இது ஆகம விதிகளுக்கு முரணானது. எனவே கோயிலுக்குள் அலைபேசிகளை கொண்டுவர தடை விதிக்க வேண்டும் என்று கோரி சுப்பிரமணிய சுவாமி கோயில் அர்ச்சகர் சீதாராமன், சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த நீதிபதிகள், “தமிழகத்தில் உள்ள கோயில்களில் யாரும், என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலை உள்ளது.இது கண்டிப்பாக மாற்றப்பட வேண்டும்.திருப்பதி கோயிலின் வாசலில் கூட நின்று படம் எடுக்க முடியாது.ஆனால் தமிழகத்தில் சாமி சிலைகள் முன்னால் நின்று செல்பி எடுத்துக்கொள்ளும் அளவுக்கு சுதந்திரம் அளிக்கிறார்கள்.கோயில்கள் ஒன்றும் சுற்றுலாத்தலங்கள் கிடையாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.மேலும் கோயில்களுக்கு வருபவர்கள் நாகரிகமான ஆடைகள் அணியாமல் டி ஷர்ட், ஜீன்ஸ், ஷார்ட்ஸ், லெகின்ஸ் போன்ற ஆடைகள் அணிந்து வருவதையும் ஏற்க முடியவில்லை. திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலுக்குள் பக்தர்கள், அர்ச்சகர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் அலைபேசிகள் கொண்டுசெல்வதற்கு தடை விதித்து அறநிலையத்துறை ஆணையர் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்” என்று அறிவுறுத்தினர். அதன்படி கோயிலில் அலைபேசிக்கு தடை விதிக்கப்பட்டது. இது தொடர்பாக கோயில் செயல் அலுவலர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில், “14ம் தேதி முதல் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குள் அலைபேசிகள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்காக காவடி மண்டபத்தில் அலைபேசிகள் பாதுகாப்பகம் அமைக்கப்பட்டு, 300 அலைபேசிகள் வைக்கும் வகையில் வசதி செய்யப்பட்டு வருகிறது.தடையை மீறினால் அலைபேசிகள் பறிமுதல் செய்யப்படும், திருப்பித்தர மாட்டாது என்று கோயில் வளாகத்தில் 15 இடங்களில் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.ஒலிபெருக்கி மூலமாக பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. பக்தர்கள், கோயில் பணியாளர்கள் உள்பட அனைவரும் அலைபேசி எடுத்து வர தடை விதிப்பது, பக்தர்கள் பாரம்பரிய ஆடைகள் அணிந்து வருவது போன்றவற்றை கண்காணிப்பதற்காக மகளிர் சுயஉதவி குழுவினரை நியமிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கும் இதற்குரிய பாதுகாப்பை அளிக்கும்படி காவல்துறைக்கும் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன” என கூறப்பட்டு இருந்தது. இதையடுத்து நீதிபதிகள், “கோயிலுக்குள் சுதந்திரத்தை கடைபிடிப்பது என்பது விதிமுறைகளுக்கு உட்பட்டது.கோயிலில் நடக்கும் வழிபாடுகளில் கடைபிடிக்க வேண்டிய சடங்குகள் குறித்த விதிகளை ஆகமங்கள் வகுத்துள்ளன.அதன்படி, கோயிலின் கண்ணியம், புனிதம் காக்கப்படுவதை கோயில் அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.திருச்செந்தூர் கோயிலில் அலைபேசி தடை, ஆடை கட்டுப்பாடுகள் செய்வதற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், காவல்துறை செய்து தர வேண்டும். தூய்மை மற்றும் புனிதத்தை காக்கும் வகையில் அலைபேசிகள் தடை, ஆடை கட்டுப்பாடுகளை தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் ஹிந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அமல்படுத்த வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here