கர்நாடக மாநிலம் நந்தி மலைக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள ஆதியோகி சிலையை திறக்க ஈஷா அறக்கட்டளைக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. சிக்கபல்லப்பூரில் உள்ள புதிய மையமான ஆதியோகி சிலை திறப்பு விழாவை இன்று (ஜனவரி 15) அன்று நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து இங்கு நடைபெறவுள்ள நிகழ்ச்சிக்கு குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தலைமை தாங்குகிறார். கோயம்புத்தூரில் உள்ள ஈஷா யோகா மையத்தில் உள்ள ஆதியோகியின் பிரதியை அவர் வெளியிடுவார் என்று ஈஷா அறக்கட்டளை தெரிவித்தது, இந்நிகழ்ச்சியில் கர்நாடக ஆளுநர் தாவர் சந்த் கெலாட், முதல்வர் பசவராஜ் பொம்மை ஆகியோரும் கலந்து கொள்கின்றனர். முன்னதாக, சிக்கபள்ளாபுரா தாலுகாவைச் சேர்ந்த விவசாயி கியாதப்பா என்பவர், ஈஷா அறக்கட்டளைக்கு எதிராக தாக்கல் செய்த மனுவில், கட்டப்பட்டு வரும் ஈஷா யோகா மையம், ஒட்டுமொத்த சுற்றுச்சூழல், மற்றும் இயற்கை மழை நீர் ஓடைகள், நீர்நிலைகளை அழிக்கும். இது சுற்றுச்சூழல் சட்டங்களை முற்றிலும் மீறுவதாகும். இது இப்பகுதியில் உள்ள வாழ்வாதாரம், கால்நடைகள், செம்மறி ஆடுகள், வன விலங்குகள் ஆகியவற்றின் மீது நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும், ஈஷா யோகா மையத்திற்கு சாதகமாக, துணை ஆனையர், உதவி ஆணையர், தாசில்தார், சிக்கபள்ளாபுரா நகர்ப்புற வளர்ச்சி ஆணையம், சட்டவிதிகளுக்கு மாறாக சட்டவிரோத உத்தரவுகளை பிறப்பித்துள்ளனர் என குற்றம் சாட்டப்பட்டிருந்தது. சுவாரசியமாக, இந்த மனுவுக்காக வாதாடியவர் லட்சக் கணக்கில் சம்பளம் வாங்கும் உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞரான பிரசாந்த் பூஷண் என்பது குறிப்பிடத்தக்கது.