தைப்பூசம் தமிழர் பாரம்பரியத் திருநாள்களில் முக்கியமானது. சுப்பிரமணிய சுவாமியை வேண்டி இயற்றும் விரதங்களில் தைப்பூச விரதமே முதன்மையானதாக கருதப்படுகிறது. பௌர்ணமி தினத்தன்று முழு நிலவு சமயத்தில் பூசம் நட்சத்திரம் வரும்போது சிறப்பு வழிபாடுகள் செய்வதே தைப்பூசத்தின் முக்கிய நிகழ்வாகும். சிதம்பரத்தில் நடராஜர், உமாதேவியுடன் ஆனந்த நடனம் ஆடி பக்தர்களுக்கு தைப்பூசம் அன்றுதான் தரிசனம் கொடுத்தார்.
தைப்பூசத்தை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் இருந்து காவிரி தீர்த்தம் எடுத்து தீர்த்தக் காவடியாக வருவதை கொங்கு மண்டல மக்கள் மிகவும் சிறப்பாக நினைக்கிறார்கள். தைப்பூசத்தன்று பழனிக்கு காவடி எடுத்து வரும் பக்தர்கள் வழிநெடுக முருகனை நினைத்து பாடியபடி வருவதை வழக்கத்தில் வைத்திருந்தனர். அந்த பாடல்கள் ‘காவடி சிந்து’என்று அழைக்கப்பட்டன. தேவர்களின் குருவான பிரகஸ்பதியின் நட்சத்திரம் பூசமாகும். எனவே தைப்பூசம் தினத்தன்று குரு வழிபாடு செய்வது மிகுந்த பலனைத் தரும். தைப்பூசம் பாரதத்தில் மட்டுமின்றி இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரிசியஸ் நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது.
தைப்பூசத்தில் தொட்டதெல்லாம் துலங்கும் என்றொரு பழமொழி உண்டு. வள்ளியை முருகப் பெருமான் திருமணம் செய்த நாள் தைப்பூச நன்னாள். கும்பகோணத்திற்கு அருகில் உள்ள திருச்சேறையில் காவேரித்தாய், பகவான் நாராயணனை நோக்கித் தவமிருந்தாள். அவள் தவத்தைப் போற்றிய பெருமாள் காட்சி கொடுத்து அருளியதும் தைப்பூசத்தில்தான். இலங்கையில் நல்லூர் என்னும் தலத்தில் உள்ள முருகன் ஆலயத்தில் வேலாயுதத்தை கருவறையில் எழுந்தருளச் செய்து, அதை முருகப் பெருமானாகக் கருதி வழிபடுகிறார்கள். வேலின் இருபுறமும் வள்ளி, தெய்வானை காட்சி தருகிறார்கள். கணவன், மனைவியிடையே அன்பு அதிகரிக்கச் செய்யவும், அவர்கள் பிரியாத வரத்தைப் பெறவும் தைப்பூச சிவாலய வழிபாடு மிகுந்த பயனை நல்கும்.
`வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன். பசியினால் இளைத்தே வீடுதோறிரந்தும் பசியறாது அயர்ந்த வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்’ எனப் பாடிய ராமலிங்க அடிகளார் எனும் வள்ளலார், தைப்பூசத் திருநாளில்தான் வள்ளலார் ஜோதி வடிவாகிப் பரம்பொருளோடு கலந்தார். பொதுவாக தைமாசம் தவிர்த்த பிற மாத பூசநட்சத்திர தினத்தில் ஆறு திரைகள் மட்டுமே நீக்கி ஜோதி தரிசனம் காட்டப்படும். தைப்பூசத்தன்று ஏழு திரைகளையும் நீக்கி ஜோதி தரிசனம் அருள்வர்.