இந்திய விலங்குகள் நல வாரியம், பிப்ரவரி 14ம் தேதியை பசு அரவணைப்பு தினமாக கடைப்பிடிக்குமாறு மக்களை வலியுறுத்தி உள்ளது. பாரத கலாச்சாரம் மற்றும் கிராமப்புற பொருளாதாரத்தில் பசுக்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் இது கொண்டாடப்பட உள்ளது. சர்வதேச யோகா தினத்தைப் போலவே, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகம், இந்திய விலங்குகள் நல வாரியத்துடன் இணைந்து பாரத கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்காக ‘பசு அரவணைப்பு தினத்தை’ அனுசரிக்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளது. இதுகுறித்து விலங்குகள் நல வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தாய் பசுவின் முக்கியத்துவத்தை மனதில் கொண்டும், வாழ்க்கையை மகிழ்ச்சியாகவும், நேர்மறை ஆற்றல் நிறைந்ததாகவும் மாற்றும் வகையில், அனைத்து பசுப் பிரியர்களும் பிப்ரவரி 14ம் தேதியை பசு அரவணைப்பு தினமாக கொண்டாடலாம். மேற்கத்திய கலாச்சாரத்தின் கடுமையான தாக்கத்தால், நமது வேத மரபுகள் கிட்டத்தட்ட அழிவின் விளிம்பில் இருக்கின்றன. எனவே, தேசத்தின் பாரம்பரியத்தை பாதுகாக்கவும் மேம்படுத்தவும் பசு அரவணைப்பு தினத்தை கொண்டாடலாம்’ என்று கூறப்பட்டுள்ளது. இந்திய விலங்குகள் நல வாரியத்தின் சட்ட ஆலோசகர் பிக்ரம் சந்திரவன்ஷி இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், பாரத கலாச்சாரத்தின் மீது கருணை காட்ட மக்களை ஊக்குவிப்பதும் பசுக்களின் நன்மைகள் பற்றிய விழிப்புணர்வை பரப்புவதும், மேற்கத்திய கலாச்சாரத்தின் தாக்கத்தால் மெல்ல மெல்ல விலகிச் செல்பவர்களை மீட்டெடுப்பதும் இதன் நோக்கம் என்று கூறினார்.