சிவாஜியின் சிவஸ்ருஷ்டி

0
134

பாரதத்தில் ஹிந்து சாம்ராஜ்ஜியத்தை நிறுவிய மராட்டிய மாமன்னர் சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் பிறந்தநாளையொட்டி, புனேயில் சிவாஜி மகாராஜின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட பிரம்மாண்டமான வரலாற்று தீம் பூங்காவான ‘சிவ்ஸ்ருஷ்டி’யின் முதல் கட்டத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார். மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆகியோர் உடனிருந்தனர். மகாராஷ்டிராவில் சுற்றுலாவை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்தத் திட்டம், “மராட்டியப் பேரரசின் வரலாற்றிற்கு அர்ப்பணிக்கப்பட்ட ஆசியாவின் மிகப்பெரிய தீம் பூங்காவாக இருக்கும். சிவஸ்ருஷ்டியை தொடங்குவதற்கு இன்றைய நாளை விட சிறந்தது இல்லை” என்று அமித் ஷா கூறினார். 60 கோடி ரூபாய் செலவில் இத்திட்டத்தின் முதல் கட்டப் பணிகள் முடிவடைந்துள்ளன. இதற்கு மாநில அரசு 50 கோடி ரூபாய் வழங்கியுள்ளது.

இந்நிகழ்ச்சியில் சத்ரபதி சிவாஜி மகாராஜைப் பற்றி பேசிய அமித்ஷா, “சிவாஜி மகாராஜா சுயராஜ்யம், சுயமதம், சுயத்திற்கான போராட்டம் மற்றும் சுயமொழியை வலியுறுத்தினார். அவர் தனது நிலைப்பாட்டின் மூலம் பொது நலனை மேம்படுத்துவதே அரசின் நோக்கம் என்ற கருத்தை அனுப்பியவர். ஒரு நல்ல அரசன் எப்படி இருக்க வேண்டும் என்பதை உலகுக்கு எடுத்துக் காட்டினார். சுயராஜ்யத்தை நிறுவியதன் மூலம், பாரதத்தை யாராலும் ஒடுக்க முடியாது என்பதையும், மக்களை யாராலும் இழிவுபடுத்த முடியாது என்ற செய்தியையும் சிவாஜி உலகம் முழுவதிற்கும் வழங்கினார்.

இதன் விளைவாக, சத்ரபதி சிவாஜி என்பது வெறுமனே ஒரு பெயர் அல்ல அதைக்காட்டிலும் மேலானது; இது ஒரு தத்துவம். அவர் நிறுவிய அஷ்டபிரதான் மண்டலத்தின் மூலம் சுயராஜ்யத்தின் பார்வையை காணலாம். அவரால் தொடங்கப்பட்ட ஆட்சி இன்றும் தொடர்கிறது. அவர் காட்டிய வழியில் இன்றைய அரசும் செல்கிறது. சிவாஜியின் பாரம்பரியத்தைக் கடைப்பிடித்தே பிரதமர் நரேந்திரமோடி, நாடு முழுவதும் உள்ள கலாச்சார மற்றும் ஆன்மிகத் தலங்களை புனரமைத்து வருகிறார். அவரது சிந்தனைகளை பல தலைமுறைகளுக்கு எடுத்துரைக்கும் சிவ சிருஷ்டி இன்று என் கரங்களால் தொடங்கப்படுவதில் மிக்க மகிழ்ச்சி” என கூறினார்.

சிவஷாஹிர் பாபாசாஹேப் புரந்தரே பற்றிப் பேசிய அமித்ஷா, “சிவஷாஹிர் பாபாசாஹேப், சிவாஜி மகாராஜாவின் பணிகள் மக்களைச் சென்றடைவதற்காகத் தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தார். அவர் அப்படிச் செய்யாமல் இருந்திருந்தால், சிவாஜியின் பணிகள் வெகு சிலரை மட்டுமே சென்றடைந்திருக்கும். அவரது ‘ஜனதா ராஜா மகாநாட்டிய’ சோதனைகள் மிகவும் செல்வாக்கு பெற்றன. மக்கள் நாடகத்தைப் பார்க்க வந்து, திரும்பிச் சென்று, சிவாஜி மகாராஜின் பக்தரானார்கள். பாபாசாஹேப் உலகம் முழுவதிலுமிருந்து சத்ரபதி சிவாஜி தொடர்பான பல ஆவணங்களை வரவழைத்து, அதனை ஆய்வு செய்து சிவாஜியின் வாழ்க்கை வரலாற்றை எழுதினார். இது தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததியினருக்கு இது மிகவும் மதிப்புமிக்கது. தொழில்நுட்பம் மற்றும் வரலாற்றை உள்ளடக்கிய வியப்பிற்குரிய கலவையாக, இந்த ஷிவ் சிருஷ்டி பூங்கா திகழ்கிறது. பிரதமர் நரேந்திர மோடி, குஜராத் மாநிலத்தின் முதல்வராக இருந்தபோது, மாநிலத்தின் எட்டு மாவட்டங்களிலும் ‘ஜனதராஜா’ நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார்” என கூறினார்.

முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பேசுகையில், “சத்ரபதி சிவாஜி மக்களுக்காக தனது உயிரைக் கொடுத்தார். அவர் மிகவும் திறமையான நிர்வாகி, தொலைநோக்குக் கொண்ட மிகவும் அக்கறையுள்ள மன்னர். உலகம் முழுவதும் அவரைப் போல் வேறு எந்த மன்னர் இருந்தது இல்லை. சிவ்ஷாஹிர் பாபாசாகேப் புரந்தரே, வீரசிவாஜியின் பணிகளையும் அவரது இலட்சியங்களையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஒரு சிறந்த பணியினை செய்தார். மகராஜின் பணிகளையும் அவரது இலட்சியங்களையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணி.அவரது கனவாக இருந்த இந்த சிவ சிருஷ்டி திட்டத்தின் பணி இப்போது நம் அனைவருக்கும் இது சொந்தமானது. எனவே இந்த பணி இனி நிற்காது, மிக வேகமாக முன்னேறும் என நம்புகிறேன். அதற்கு மகாராஷ்டிரா அரசு முழு ஆதரவையும் வழங்கும்” என்றார்.

துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் கூறுகையில், “சிவாஜியின் ஜெயந்தி தினமான இன்று முதல் கட்ட சிவ சிருஷ்டி திறப்பு விழா நடைபெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த இடத்திற்கு வருகை தந்தால் நாட்டின் இளைஞர்கள் திருந்துவார்கள் என நம்புகிறேன். இங்கிருந்து சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் சாஸ்திர அறிவு மட்டுமின்றி, அவரது மேலாண்மை அறிவியல், நிர்வாக முறைகள், சுற்றுச்சூழல் கருத்தாய்வு, கடற்படை பணி ஆகியவை மேலும் மேலும் மக்களை சென்றடைய வேண்டும். இதற்காக மகாராஷ்டிர அரசு இந்த திட்டத்திற்கு அனைத்து ஆதரவையும் அளிக்கும். 2014ம் ஆண்டு பா.ஜ.கவில் பிரதமர் பதவிக்கு பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் அறிவிக்கப்பட்டபோது, அவர் முதலில் மகாராஷ்டிராவுக்கு வந்து சத்ரபதி சிவாஜி மகாராஜாவை வணங்கி, தியானம் செய்த பின்னர் தான் நாடு முழுவதும் தனது பிரச்சாரத்தை துவக்கினார்” என கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here