தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் உள்ள சர்ச் ஒன்றில் பாதிரியாக இருப்பவர் ஸ்டான்லி குமார். 49 வயதான இவர் கன்னியாகுமரி மாவட்டம் தடிகாரன்கோணத்தை சேர்ந்தவர். இவர் ‘பிலிவர்ஸ் சர்ச்’ என்ற கிறிஸ்துவ சபையை நடத்தி வருகிறார். ஸ்டான்லி குமாருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இவர் மீது பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. அதில், சிறப்பு ஜெபம் எனக் கூறி தனது மகளிடம் பாதிரி ஸ்டான்லி குமார் அத்துமீறினார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பாதிரி மீது மற்றொரு பெண் அளித்துள்ள புகாரில், தன்னுடைய குளியல் புகைப்படத்தை வைத்து மிரட்டுகிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இவர் பாதிரியாக உள்ள சர்ச்சில், வழிபாட்டுக்கு வரும் பெண்களின் மொபைல் போன் எண்களை வாங்கி வைத்து, இரவில் ஆபாசமாக பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். சர்ச்சுக்கு வரும் பெண்களின் புகைப்படங்களை ‘மார்பிங்’ செய்து வைத்துள்ளதாக கூறி, பாலியல் இச்சைக்கு மிரட்டியுள்ளார் என்வும் புகார்கள் எழுந்துள்ளன. இந்த சூழலில், கன்னியாகுமரியை சேர்ந்த பாதிரி பெனடிக்ட் ஆண்ட்ரோ போலவே, பாதிரி ஸ்டான்லி குமார் மீது மேலும் சில புகார்கள் எழலாம் என்றும் அவரது லேப்டாப்பில் மேலும் சில வீடியோ, ஆடியோ ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தப் புகார் தொடர்பாக பாவூர்சத்திரம் காவல் ஆய்வாளர் சுதந்திர தேவி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். பாதிரி ஸ்டான்லி குமார் மீது பெண்களிடம் கன்னியக்குறைவாக நடத்தல் உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர். இதற்கிடையில் தன் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தால் தற்கொலை செய்துகொள்வேன் என பாதிரி ஸ்டான்லி மிரட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது.