மே 20, 1923 சென்னை மாகாணம் பாலக்காடு மாவட்டத்தில் (தற்போது இது கேரள மாநிலத்தில் உள்ளது) மஞ்சப்பார என்னும் கிராமத்தில் பிறந்தார். தந்தையார் இசை ஆசிரியர். இராமநாதன் பாலக்காட்டிலுள்ள விக்டோரியா கல்லூரியில் இயற்பியலில் இளநிலை பட்டம் பெற்றார். தொடக்க இசைப்பயிற்சியை தனது தந்தையாரிடம் கற்றார். மேலும் தகுதி பெறுவதற்காக இராமநாதனை அவரது தந்தை சென்னைக்கு அழைத்துச் சென்றார். சென்னை கலாசேத்திராவில் வாய்ப்பாட்டில் முதலாவது மாணவராக இராமநாதன் தேர்ந்தெடுக்கப்பட்டார். முதலாவதாக மட்டுமன்றி வாய்ப்பாட்டில் முதலாவது வகுப்புக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரேயொரு மாணவராகவும் விளங்கினார். இதனால் கலாஷேத்ரா ஆசிரியர் டைகர் வரதாச்சாரியார் தனிக் கவனம் எடுத்து கற்றுக்கொடுத்தார். இசைப் பயிற்சி முடிந்தபின் அங்கேயே தனது குருவான டைகர் வரதாச்சாரிக்கு உதவியாக இருந்தார். பின்னர் கலாசேத்திராவிலேயே இசைப் பேராசிரியராகவும் அதன் பின்னர் அங்கே இருந்த நுண்கலைக் கல்லூரிக்கு முதல்வராகவும் பணியாற்றினார். தனது 60 ஆவது அகவையில் மாரடைப்பால் காலமானார்.