மத்திய அரசின், ‘பிஎம்-யாசஸ்வி’ கல்வி உதவித்தொகை தேர்வு அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், பள்ளிகளுக்கு எந்த தகவலையும், கல்வித்துறை அளிக்காதது ஏமாற்றத்தை அளிப்பதாக புகார் எழுந்துள்ளது. மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் கீழ், ‘பிஎம்-யாசஸ்வி’ (PM Young Achievers Scholarship Grant Scheme for a Vibrant India (YASASVI) என்ற கல்வி உதவித்தொகை தேர்வு, ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. ஒன்பது, பிளஸ்1 மாணவர்கள் மட்டுமே பங்கேற்கும் இத்தேர்வுக்கு, தேசிய தேர்வு முகமை மூலம், நாடு முழுக்க, அனைத்து மாவட்டங்களிலும் மையங்கள் அமைக்கப்படுகின்றன. நடப்பாண்டுக்கான தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம், http://yet.nta.ac.in என்ற இணையதளத்தில், விண்ணப்பிக்க ஆக.,10ம் தேதி கடைசி நாள். செப்., 29ம் தேதி தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டணம் ஏதுமின்றி மாணவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். ஆங்கிலம், இந்தியில் மட்டுமே தேர்வு நடக்கிறது. ஆனால் இதுகுறித்த அறிவிப்பு, பள்ளிகளுக்கு சென்றடையவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.’மத்திய அரசின் பல்வேறு துறைகள், பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள், உதவித்தொகை திட்டங்கள், போட்டித்தேர்வுகளை அறிவிக்கின்றன. இதை மாநில கல்வித்துறை ஒருங்கிணைத்து, பள்ளிகளுக்கு அனுப்புவதில்லை. ‘பிஎம்-யாசஸ்வி’ தேர்வு குறித்து, பெரும்பாலான பள்ளி நிர்வாகிகளுக்கே தெரியாத நிலையில், மாணவர்கள் தாமாக விண்ணப்பிக்க முடியாத நிலை உள்ளது. இத்தேர்வில், இதில் தேர்வாகும், ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு, 75 ஆயிரம் ரூபாயும், பிளஸ் 1 மாணவர்களுக்கு, 1.25 லட்சம் ரூபாய் கல்வி உதவித்தொகையும் வழங்கப்படுகிறது.
Home Breaking News தேசிய கல்வி உதவித்தொகை தேர்வு அறிவிப்பு; பள்ளிகளுக்கு எதுவும் அறிவிக்காத தமிழக கல்வித்துறை