வாரணாசியில் உள்ள புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோவில் அருகே, 17ம் நுாற்றாண்டில் முகலாய மன்னர்களால் கட்டப்பட்ட ஞானவாபி மசூதி வளாகம் உள்ளது. ஏற்கனவே இருந்த ஹிந்து கோவிலை இடித்து இந்த வளாகம் கட்டப்பட்டதாக புகார் எழுந்தது. இந்த வளாகத்தில் தொல்லியல் துறையினர் அறிவியல்பூர்வ ஆய்வு மேற்கொள்ள வாரணாசி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை அலகாபாத் உயர் நீதிமன்றம் உறுதி செய்தது. இதையடுத்து கடந்த 4ம் தேதி முதல், ஞானவாபி வளாகத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். ஹிந்து மற்றும் முஸ்லிம் தரப்பு பிரதிநிதிகள் உடனிருந்து ஆய்வுப் பணிகளை பார்வையிட்டு வருகின்றனர். இந்நிலையில் ஆய்வு குறித்து பல தவறான தகவல்களை ஊடகங்கள் பரப்புவதாக முஸ்லிம் தரப்பு குற்றஞ்சாட்டியது. எனவே வளாகத்தில் இருந்து செய்தி சேகரிக்க தடை விதிக்க கோரி அஞ்சுமன் இன்டெஸாமியா கமிட்டி சார்பில் வாரணாசி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிமன்றம் ஞானவாபி வளாகத்தில் இருந்து ஊடகங்கள் நேரடியாக செய்தி சேகரிக்க தடை விதித்தது. மேலும் தொல்லியல் ஆய்வில் ஈடுபட்டுள்ள ஆய்வாளர்கள், ஊடகங்களில் கருத்து தெரிவிப்பதை தவிர்க்கும்படியும் நீதிமன்றம் உத்தரவிட்டது.