பாட்னாவில் (பிஹார்) டிசம்பர் 22, 1666 ஆம் ஆண்டு பிறந்தார். இவரது இயற்பெயர், கோவிந்த் ராய். முகலாய மன்னனால், இவரது தந்தையும் 9-வது சீக்கிய குருவுமான குருதேக் பகதூர் கொலையுண்டதை அடுத்து, 9 வயதில் சீக்கிய மதத்தின் 10-வது குருவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பல்வேறு காலகட்டங்களில் முகலாயர்களுடன் பாங்கனி யுத்தம், நாதவுன் யுத்தம் உள்ளிட்ட மொத்தம் பதினான்கு முறை போர்களைத் தலைமையேற்று நடத்தினார். போர்களில் தாய், மகன்களை இழந்தார்.1684-ல் ‘சாண்டி-தி-வார்’ என்ற நூலை பஞ்சாப் மொழியில் எழுதினார். ‘ஜப் சாஹிப்’, ‘அம்ருத் சவையா’, ‘பெண்டி சவுபாய்’ உள்ளிட்ட பல பிரார்த்தனைக் கீதங்களையும் எழுதியுள்ளார். தனது கவிதைகள் மூலமாக நேசம், சமத்துவம் தார்மீக நடத்தை விதிமுறைகள், சமய நெறிமுறைகளைப் பின்பற்றுதல் ஆகியவற்றைப் போதித்தார்.பாண்டா சாஹிப்’ என்ற மத வழிபாட்டு மையத்தை நிறுவினார். இங்கு மத போதனை, ஆயுதப் பயிற்சி, இந்தி, பாரசீகம், பஞ்சாபி மொழி ஆகியவை கற்பிக்கப்பட்டன. ஆனந்த்பூர் சாகிப் வட்டாரத்தில் கேஷ்கர், ஃபதேகர், லாப்கர் மற்றும் ஆனந்த்கர் என்ற நான்கு கோட்டைகளைக் கட்டினார். இங்கு ஆயுதத் தயாரிப்பு மற்றும் ஆயுதப் பாதுகாப்புக்கான இடங்களை ஏற்படுத்தினார்.எதிரிகளிடமிருந்து சீக்கியர்களைக் காத்துக்கொள்ளவும் அநீதி மற்றும் கொடுங்கோன்மைக்கு எதிராகப் போரிடும் வலிமையுடைய சமயமாக சீக்கிய மதத்தை மாற்றவும், கால்சா (பவித்திரமான) என்ற அமைப்பைத் தொடங்கினார். இந்த அமைப்பினரை அகாலி (இறவாதவன்) என்று அழைத்தார். சீக்கிய ஆண்கள் தலைப்பாகை வைத்திருக்கும் பழக்கத்தை வகுத்தார். சீக்கியர்கள் அனைவரும் சிங்கம் போன்ற வலிமையும், சுயமரியாதையும் உடையவர்கள் என்று முழங்கினார். பிற்காலச் சீக்கிய மதக் கோட்பாடுகளுக்கு வித்திட்டார். சீக்கியத்தின் பல கூறுகளை உறுதிப்படுத்தியதுடன் சீக்கிய மத நூலான குரு கிரந்த் சாஹிபை சீக்கிய மதத்தின் வாழும் குருவாக்கினார். குரு கிரந்த் சாஹிப்பின் ‘தஸம் கிரந்த்’ என்ற கடைசி பாகத்தை இவரே எழுதினார். ராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றின் சில பகுதிகளையும், சண்டி சரிதர், பகவதி தீவார், ராம் அவதார், துர்க ஸப்தஸதி ஆகிய நூல்களையும் பஞ்சாபி மொழியில் மொழிபெயர்த்தார். 1698-ல் ‘பச்சிட்டார் நாடக்’ என்ற சுயசரிதையை எழுதினார். தான் இறப்பதற்கு முன் குரு கிரந்த் சாஹிப்தான் இனி சீக்கியர்களின் குரு என்று அறிவித்தார். சீக்கியர்களின் கடைசி குரு குரு கோவிந்த் சிங் 1708-ம் ஆண்டு 42-வது வயதில் மறைந்தார்.
#gurugobindsinghjayanti #சான்றோர்தினம்