செந்தமிழுக்கு சேதுப்பிள்ளை என்று போற்றப்பட்ட ரா.பி.சேதுப்பிள்ளை பிறந்த தினம் இன்று

0
162

திருநெல்வேலி மாவட்டம் ராசவல்லிபுரத்தில் மார்ச் 2, 1896 ஆம் ஆண்டு பிறந்தவர். மூதுரை, நல்வழி, நீதிநெறி விளக்கம், தேவாரம், திருவாசகம் போன்ற நூல்களை சிறு வயதிலேயே கற்றார். பாளையங்கோட்டையில் உயர்நிலைக் கல்வி, திருநெல்வேலி இந்து கல்லூரியில் இன்டர்மீடியட் முடித்து சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பட்டம் பெற்றார். அங்கு ஆசிரியராகப் பணியாற்றிக்கொண்டே சட்டம் பயின்றார். 1923-ல் வழக்கறிஞர் பணியைத் தொடங்கினார். அப்போது நகரமன்ற உறுப்பினராகவும், நகராட்சித் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். தவறாகக் குறிப்பிடப்பட்டு வந்த தெருக்களின் பெயர்களைத் திருத்தி உண்மையான பெயர்களை நிலைபெறச் செய்தார். அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறையில் விரைவுரையாளராக 6 ஆண்டுகள் பணிபுரிந்தார். தன் செந்தமிழ்ப் பேச்சால் மாணவர்களைப் பெரிதும் கவர்ந்தார். தமிழுக்கு இணையாக ஆங்கிலத்திலும் புலமை பெற்றிருந்தார். தனது பேச்சாலும் எழுத்தாலும் தமிழுக்குப் பெருமை சேர்த்தார். தமிழ்ப் பேரகராதியைத் தொகுக்க தமிழ் ஆராய்ச்சித் துறைத் தலைவர் வையாபுரிப் பிள்ளைக்கு உதவினார். வையாபுரிப் பிள்ளைக்குப் பிறகு பேரகராதி தொகுப்புப் பணியை ஏற்றார். சிறந்த மேடைப் பேச்சாளர். கோகலே மன்றத்தில் 3 ஆண்டுகள் தொடர்ச்சியாக சிலப்பதிகார வகுப்பு நடத்தினார். தங்கச் சாலையில் உள்ள தமிழ் மன்றத்தில் வாரம் ஒருமுறை என 5 ஆண்டுகளுக்கு திருக்குறள் விளக்கவுரை நிகழ்த்தினார். கந்தக்கோட்ட மண்டபத்தில் 5 ஆண்டுகள் கந்தபுராண விரிவுரை நிகழ்த்தினார். 14 கட்டுரை நூல்கள், 3 வாழ்க்கை வரலாற்று நூல்கள் என 20-க்கும் மேற்பட்ட உரைநடை நூல்களை எழுதியுள்ளார். 4 நூல்களை பதிப்பித்தார். இவர் தமிழகம் முழுவதும் வானொலி நிலையங்கள், பல்வேறு இலக்கிய அமைப்புகளில் ஆற்றிய இலக்கிய சொற்பொழிவுகளின் தொகுப்புகளும் பல நூல்களாக வந்தன. இவரது ‘தமிழின்பம்’ என்ற நூலுக்கு இந்திய அரசின் சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. செய்யுளுக்கு என்றே கருதப்பட்ட அடுக்குமொழி, எதுகை, மோனை, இலக்கியத் தொடர் என்ற அனைத்தையும் உரைநடையிலும் கொண்டுவந்தவர். சொல்லின் செல்வர் என்று புகழப்பட் டார். ‘செந்தமிழுக்குச் சேதுப்பிள்ளை’ என்று சுத்தானந்த பாரதியால் போற்றப்பட்டார். சென்னைப் பல்கலைக்கழகம் இவருக்கு முனைவர் பட்டம் வழங்கியது. தமிழ் விருந்து, தமிழர் வீரம், ஆற்றங்கரையினிலே உள்ளிட்ட இவரது பல படைப்புகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. இலக்கியப் பேரறிஞர் ரா.பி.சேதுப்பிள்ளை 65 வயதில் (1961) மறைந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here