நாராயணன் நம்பியார் 1919 மார்ச் 7 ல் கேரளத்தின் கண்ணனூர் அருகில் உள்ள செருபழசி என்ற சிற்றூரில் பிறந்தார். கெளு நம்பியார் – லட்சுமி அம்மாள் தம்பதியின் கடைசி மகன். கேரளத்தில் பிறந்தாலும் ஊட்டியில் வளர்ந்தார். அங்குள்ள நகராட்சிப் பள்ளியில் ஐந்தாம் வகுப்புவரை படித்தார். 13 வயதில், ஊட்டியில் முகாமிட்டிருந்த நவாப் ராஜமாணிக்கம் பிள்ளையின் நாடகங்களைக் கண்டு கலை ஆர்வம் கொண்டார். நாடகக் குழுவில் முதல் பணி சமையல் உதவியாளர். நாடகக் குழுவுடன் சேலம், மைசூர், தஞ்சை என நம்பியாரின் கலைப்பயணம் தொடங்கியது. அங்கே நடிப்புடன் வாய்ப்பாட்டும் ஆர்மோனியமும் கற்றுக்கொண்டார் நம்பியார். கோவை அய்யாமுத்து எழுதி, நவாப் ராஜமாணிக்கம் அரங்கேற்றிய ‘நச்சுப் பொய்கை’ என்ற நாடகத்தில் பெண் நீதிபதி வேடம் நம்பியாருக்கு 15-வது வயதில் கிடைத்தது. மாதம் மூன்று ரூபாய் ஊதியமும் கிடைத்தது. நவாபின் ‘பக்த ராம்தாஸ்’ நாடகத்தை 1935-ல் படமாக்கினார் பத்திரிகையாளர் முருகதாசா. நாடகத்தில் நடித்த அனைவருமே படத்திலும் நடிக்க, நடிகைகளே இல்லாமல் படமான அந்தப் படத்தில் பழம்பெரும் நடிகரான டி.கே.சம்பங்கியுடன் நகைச்சுவை வேடத்தில் மாதண்ணாவாக நடித்தார் நம்பியார். நவாப் குழுவின் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகராக இருந்த கே.சாரங்கபாணி விலக, அவர் ஏற்ற நகைச்சுவை வேடங்கள் அனைத்தும் நம்பியாருக்கு வந்துசேர்ந்தன. இப்போது மாதச் சம்பளம் 15 ரூபாயாக உயர்ந்தது. நவாப் குழுவிலிருந்து 23 வயதில் விலகிய நம்பியார் சக்தி நாடக சபாவில் சேர்ந்தார். அங்கே ‘கவியின் கனவு’ நாடகத்தில் ராஜகுரு வேடம் ஏற்று, முதல் வில்லன் நடிப்பை மேடையில் வெளிப்படுத்திப் புகழ்பெற்றார். ஓவியர் மாதவனின் பரிந்துரையுடன் ஜுபிடர் பிக்சர்ஸில் கம்பெனி நடிகராகச் சேர்ந்தார். முதல் படத்தில் நடித்த 9 ஆண்டுகளுக்குப்பின் ஜுபிடரில் நம்பியார் நடித்த படம், 1946-ல் வெளியான ‘வித்யாபதி’.அதன் பிறகு அவர் கலைப் பயணம் திடர்ந்து வளர்ந்தது. நடிப்பில் மட்டுமே வில்லன். உண்மையில் அனைத்து நன்நெறிகளையும் கொண்ட மாமனிதன். பக்திமான், சபரி மலை ஐயனைக் காண தான் மட்டுமில்லாது திரை உலகினர் பலரை அழைத்துச் சென்ற குருசாமி.