மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி தொடங்கி, ஜூன் 1-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 7 கட்டங்களாக நடத்தப்படும் தேர்தலில், பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இதற்கிடையே, இந்தியாவில் வாக்காளர்களின் அரசியல் மற்றும் சமூக உரிமைகள் பாதுகாக்கப்பட்டு, சுதந்திரமான மற்றும் நியாயமான சூழ்நிலையில் வாக்குப்பதிவு நடைபெறும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று ஐநா சபையின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்தார்.
இந்நிலையில், தேர்தலை நடத்துவது குறித்து ஐநா எங்களுக்கு சொல்லத் தேவையில்லை என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது, இந்தியாவில் தேர்தலை சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடத்துவது குறித்து ஐநா அமைப்பு எங்களுக்கு சொல்லத் தேவையில்லை. தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடப்பதை இந்தியாவின் மக்கள் உறுதி செய்வார்கள். எனவே, அதைப் பற்றி ஐநா அமைப்பு கவலைப்பட வேண்டாம் என்று கூறினார்.