இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பிறந்த தினம் இன்று

0
875

தஞ்சாவூர் மாவட்டத்தில் இளங்காடு என்னும் கிராமத்தில் ஏப்ரல் 6, 1938ஆம் ஆண்டு பிறந்தார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பி எஸ்ஸி (அக்ரி) பட்டப்படிப்பு பயின்றார். காந்தி கிராமப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். கோவில்பட்டியில் உள்ள மண்டல விவசாய ஆராய்ச்சி நிலையத்தில் விஞ்ஞானியாக 1963-ம் ஆண்டில் தன் பணியைத் தொடங்கினார்.அங்கு நடைபெற்றுவந்த ஆராய்ச்சிகள் ஏழை, எளிய விவசாயிகளுக்கு உதவாது என்ற எண்ணம் இவரது மனதை வருத்தியது. தனது கருத்தைச் சக விஞ்ஞானிகளிடம் தெரிவித்து அதனை மாற்றியமைக்க வேண்டிய அவசியத்தையும் கூறிவந்தார். ஆனால் அவர்களோ இவரது கருத்தைப் பொருட்படுத்தவில்லை.தன்னைச் சுற்றி நடப்பதை அமைதியாக, எல்லோரையும் போலப் பொறுத்துக் கொண்டுபோக முடியாத இவர், அந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு, ‘அய்லாண்ட் ஆஃப் பீஸ்’ என்ற தொண்டு நிறுவனத்தில் இணைந்தார். இந்த அமைப்பின் சார்பில் சுமார் 10 ஆண்டுகள் களக்காடு வட்டாரத்தில் பணியாற்றினார். தமிழகத்தில் இயற்கை வேளாண்மை குறித்த விழிப்புணர்வு பெருகியதற்கு முக்கியக் காரணம் என இவர் போற்றப்படுகிறார். இதற்காகப் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ‘சுற்றுச் சூழல் சுடரொளி’ விருதை வழங்கியது. திண்டுக்கல்லைச் சேர்ந்த காந்தி கிராம கிராமப்புற நிறுவனம் டாக்டர் பட்டம் வழங்கியது. தமிழக இயற்கை உழவர் அமைப்பு, தமிழ்நாடு சுற்றுச்சூழல் இயக்கம் உள்ளிட்ட பல இயக்கங்களையும் நடத்திவந்தார். ‘குடும்பம்’, ‘லிசா’, ‘மழைக்கான எகலாஜிகல் நிறுவனம்’, இந்திய அங்கக வேளாண்மைச் சங்கம்’, ‘நம்மாழ்வார் உயிர் சூழல் நடுவம்’, ‘உலக உணவு பாதுகாப்புக்கான பண்ணை ஆராய்ச்சி மையம்’ முதலான பல அமைப்புகளைத் தொடங்கினார். நல்ல எழுத்தாளராகவும் இருந்த இவர் ‘உழவுக்கும் உண்டு வரலாறு’, ‘தாய் மண்ணே வணக்கம்’, ‘வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும்’, ‘இனி விதைகளே பேராயுதம்’, ‘நோயினைக் கொண்டாடுவோம்’, ‘களை எடு’, ‘பூமித் தாயே’, ‘மரபை அழிக்கும் மரபணு மாற்று விதைகள்’ உள்ளிட்ட ஏராளமான நூல்களை எழுதியுள்ளார். இயற்கை விவசாயம், விவசாயிகள், இயற்கை வாழ்வு குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படச் செய்தார். விவசாயிகளின் நலனுக்கும் சுற்றுச்சூழலைக் காப்பதற்கும் பல போராட்டங்களை முன்னெடுத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here