சோமசுந்தர பாரதியார்

0
70
1. தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் ஜூலை 27, 1879ஆம் ஆண்டு பிறந்தார். இயற்பெயர் சத்தியானந்த சோமசுந்தரன். எட்டயபுரம் அரசியின் பராமரிப்பில் வளர்ந்தார். அரண்மனையில் பணியாற்றிவந்த சுப்பிரமணிய பாரதிக்கு நண்பரானார். இருவரும் இணைந்து பல நூல்களைக் கற்றனர். பாடல்கள் இயற்றினர். அரண்மனைக்கு வந்திருந்த ஈழப்புலவர் ஒருவர், இவர்கள் இருவருக்கும் ‘பாரதி’ என்ற பட்டத்தை வழங்கினார்.
2. எட்டயபுரத்திலும், நெல்லை சிஎம்எஸ் கல்லூரி பள்ளியிலும் பயின்றார். சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் பி.ஏ. பட்டப் படிப்பையும், சென்னை சட்டக் கல்லூரியில் இளநிலை சட்டப் படிப்பையும் முடித்தார்.
3. வழக்கறிஞராகப் பணியாற்றிக்கொண்டே, முதுநிலை சட்டம் படித்து பட்டம் பெற்றார். சிறந்த வழக்கறிஞர் என்று புகழ்பெற்றார். ஆயிரக்கணக்கில் சம்பாதித்தவர் அதை விட்டுவிட்டு, வ.உ.சி.யின் அழைப்பை ஏற்று ரூ.100 சம்பளத்தில் அவரது சுதேசிக் கப்பல் கம்பெனியின் நிர்வாகப் பொறுப்பை ஏற்றார்.
4. ஒத்துழையாமை இயக்கம், தீண்டாமை ஒழிப்பில் காந்தியடிகளைப் பின்பற்றியவர். ‘என்னிடம் 2 சரக்கு கப்பலோடு, 3-வதாக ஒரு தமிழ்க் கப்பலும் உள்ளது’ என்று வ.உ.சி. பெருமிதத்துடன் இவரைக் குறிப்பிடுவார். வ.உ.சி., சுப்பிரமணிய சிவா மீதான வழக்குகளில் அவர்களுக்காக வாதாடினார்.
5. காந்தியடிகளை முதன்முதலில் தமிழகத்துக்கு வரவழைத்து உரையாற்றச் செய்தார். தன் குடும்பத்தினரையும் விடுதலை இயக்கத்தில் பங்குபெறச் செய்தார்.
6. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறைத் தலைவராக பணியாற்றினார். தமிழ் இலக்கண, இலக்கிய ஆய்வுகளில் ஈடுபட்டார். தமிழ்க் கழகம் என்ற அமைப்பை நிறுவினார். ‘தசரதன் குறையும் கைகேயி நிறையும்’, ‘அழகு’, ‘சேரர் தாயமுறை’, ‘தமிழும் தமிழரும்’, ‘திருவள்ளுவர்’ உட்பட பல நூல்களையும், 5 ஆங்கில நூல்களையும் எழுதியுள்ளார். தமிழ் இலக்கண இலக்கியங்கள், அரசியல், வரலாறு, தமிழர் நாகரிகம், பண்பாடு, மொழி பெயர்ப்பு என நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார்.
7. ‘நான் கண்ட சுப்பிரமணிய பாரதி’ என்ற நூலை எழுதினார். மதுரை அடுத்த உசிலங்குளத்தில் தாழ்த்தப்பட்டோருக்கான தொடக்கப்பள்ளியை நிறுவினார்.
8. தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தின் மதுரை மாவட்டத் தலைவராக செயல்பட்டார். தமிழுக்கும், தமிழ் சமுதாயத்துக்கும் அருந்தொண்டுகள் ஆற்றிய நாவலர் சோமசுந்தர பாரதியார் 80 வயதில் (1959) மறைந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here