சமீபத்தில் தமிழக பாடத்திட்டத்தின் கீழ் இயங்கி வரும் தனியார் பள்ளிகளில் பாடப்புத்தகங்களின் விலை உயர்ந்துள்ளதற்கு ABVP தேசிய செயற்குழு உறுப்பினர் திரு.மனோஜ் பிரபாகர் அடங்கிய ABVP குழு மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களை சந்தித்து புத்தக விலையேற்றத்தை குறைக்க மறு பரிசீலனை செய்ய வேண்டுமென மனு அளிக்கப்பட்டது.
இது குறித்து தேசிய செயற்குழு உறுப்பினர் மனோஜ் பிரபாகர் கூறியதாவது :-
அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் தேசிய மாணவர் அமைப்பு நாடு முழுவதும் 1949 முதல் கல்வித்துறையின் பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆக்கப்பூர்வமான வகையில் தீர்வு கண்டு வருகிறது. தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் ஒரே பாடத்திட்டம் பின்பற்றப்படுகிறது. இதில் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் படிக்கும் 1 முதல் பிளஸ் 2 வரை உள்ள மாணவர்களுக்கு பாடப்புத்தகங்களில் விலை 45 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
குறிப்பாக 150 ரூபாய் முதல் 340 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.மேலும், இது நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் மத்தியிலும், அரசுத் தேர்வுகளுக்கு தயாராகி கொண்டிருக்கும் போட்டித் தேர்வர்களுக்கும் இந்த விலை உயர்வு பெரும் தாக்கத்தை பாதிப்பினை ஏற்படுத்தும்.
எனவே பெற்றோர்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு இந்த விலை உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்றும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் மெட்ரிக். பள்ளி மாணவர்களுக்கும் இலவச பாடநூல்கள் வழங்க அரசு பரிசீலிக்க வேண்டும்.
இந்த சந்திப்பின் போது மாநில இணைச்செயலாளர் சந்தோஷ்குமார், திருச்சி மாநகர செயலாளர் ஶ்ரீராம், மாநகர இணைச்செயலாளர் பபிதா உள்ளிட்ட பல்வேறு பொறுப்பாளர்கள் உடன் இருந்தனர்.