நாடு முழுதும் பயன்படுத்தும் வாகனங்களுக்கான, ‘பி.எச்., பதிவெண்’ முறை, நடைமுறைக்கு வந்தது.
வாகனங்கள் பதிவின் போது, மாநிலத்தின் முதல் எழுத்தை பதிவது வழக்கம். ஒரு மாநிலத்தில் இருந்து, வேறு மாநிலத்துக்கு இடம் மாறினால், பதிவு எண்ணை மாற்ற வேண்டும். பதிவு செய்த மாநிலத்தில் தடையில்லா சான்று பெற்று, தங்கியுள்ள மாநிலத்தில், ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் ஒப்படைத்து, வாகன பதிவு எண்ணை மாற்றிக் கொள்ளலாம்; உரிய சாலை வரி செலுத்த வேண்டும் என்ற நிலை உள்ளது.
இந்நிலையில், மாநிலம் விட்டு மாநிலம் அடிக்கடி இடம்பெயர்வோரின் வாகனங்களுக்கு ஒரே மாதிரியான பதிவெண் வழங்கும் வகையில், மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம், பி.எச்., எனும் ஆங்கில எழுத்து வரிசையுடன், பதிவெண்களை வழங்க திட்டமிட்டது. இதற்கான அறிவிப்பு, கடந்த மாதம் 15ம் தேதி வெளியிடப்பட்டது.
இது குறித்து, ஆட்சேபம் தெரிவிக்க வழங்கப்பட்ட 30 நாட்கள் கெடு நேற்று முடிந்தது. இதையடுத்து, நாடு முழுதும் பி.எச்., வரிசை பதிவெண் முறை அமலாகியுள்ளது.