மாங்கனி திருவிழா – காரைக்கால் அம்மையார் திருமண வைபவம்

0
379

காரைக்காலில் ஆண்டுதோறும் மிகவும் விமரிசையான வகையில் நடத்தப்படும் காரைக்கால் அம்மையார் மாங்கனித் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான அம்மையார் திருக்கல்யாணம் எளிமையான வகையில் இன்று (ஜூன் 22) காலை நடைபெற்றது.

63 நாயன்மார்களில் அமர்ந்த கோலத்தில் சிறப்பிடம் பெற்றவரும், பெண் நாயன்மாரும், சிவபெருமானால் அம்மையே என்று அழைக்கப்பட்டவரும், ஐந்தாம் நூற்றாண்டில் அவதரித்தவருமான புனிதவதியார் என்னும் காரைக்கால் அம்மையாருக்கு காரைக்காலில் தனிக்கோயில் உள்ளது.

இக்கோயிலில் அம்மையாரின் வரலாற்றை விளக்கும் விதமாக ஆண்டுதோறும் விமரிசையாக நடத்தப்படும் மாங்கனித் திருவிழா மிகவும் சிறப்பு பெற்றதாகும்.

காரைக்கால் சுந்தராம்பாள் சமேத கைலாசநாதர் கோயில் சார்பில் நடத்தப்படும் மாங்கனித் திருவிழா கடந்த ஆண்டு கொரோனா பரவல் சூழலால் பக்தர்கள் பங்கேற்பின்றி அனைத்து நிகழ்வுகளும் நடத்தப்பட்டன.

நிகழாண்டும் பக்தர்கள் பங்கேற்பின்றி விழா நிகழ்வுகளை நடத்த கோயில் நிர்வாகம் முடிவு செய்திருந்தது. முக்கிய நிகழ்வுகள் நடைபெறும் நாட்களில் பகதர்களை அனுமதிக்க வேண்டும் எனப் பல்வேறு தரப்பினரும் புதுச்சேரி அரசுக்குக் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதையடுத்து திருக்கல்யாண நிகழ்வுக்குப் பின்னரும், ஜூன் 24- ம் தேதி பிச்சாண்டவருக்கு அமுது படையல் செய்யும் நிகழ்வின்போதும் உரிய கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருந்தார்.

நேற்று (ஜூன் 21) மாலை மாப்பிள்ளை (பரமதத்தர்) அழைப்பு வைபவத்துடன் மாங்கனித் திருவிழா தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வுகளுள் ஒன்றான காரைக்கால் அம்மையார்- பரமதத்தர் திருக்கல்யாண வைபவம் இன்று காலை 10.35 மணிக்கு நடைபெற்றது.

வழக்கமாக அம்மையார் கோயில் மணிமண்டபத்தில் திருக்கல்யாணம் நடைபெறும். கோரோனா பரவல் சூழலால் இன்று கைலாசநாதர் கோயிலில் நடைபெற்றது.

திருக்கல்யாண வைபவத்தையொட்டி கோயில் மகா மண்டபத்துக்கு புனிதவதியார் எழுந்தருளினார். பின்னர் பரமதத்த செட்டியார் குதிரை வாகனத்தில் வந்தடைந்ததும், திருக்கல்யாண நிகழ்வுகள் தொடங்கின.

சிவாச்சாரியார்கள் திருமாங்கல்யத்துக்கு சிறப்புப் பூஜைகள் செய்தனர். தொடர்ந்து திருமாங்கல்யத்தை சிவாச்சாரியார்கள் எடுத்துக் காண்பித்து, வைபவத்தில் பங்கேற்றிருந்தோர் முன்னிலையில் அம்மையாருக்கும், பரமதத்தருக்கும் திருக்கல்யாணம் செய்து வைத்தனர்.

அப்போது மண்டபத்தில் கூடியிருந்தோர் அட்சதை தூவி அம்மையாரை வழிபட்டனர். பின்னர் சுவாமிகளுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டு, 16 வகையான சோடச உபசாரங்கள் செய்யப்பட்டன.

இதில் சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.எம்.எச்.நாஜிம், மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் சர்மா, முதுநிலை காவல் கண்காணிப்பாளர் நிஹாரிகா பட், மண்டலக் காவல் கண்காணிப்பாளர்கள் கே.எல்.வீரவல்லபன், ஆர்.ரகுநாயகம் கைலாசநாத சுவாமி, நித்யகல்யாணப் பெருமாள் வகையறா தேவஸ்தான அறங்காவல் வாரியத் தலைவர் ஆர்.ஏ.ஆர்.கேசவன், துணைத் தலைவர் பி.ஏ.டி.ஆறுமுகம், செயலாளர் எம்.பக்கிரிசாமி, பொருளாளர் டி.ரஞ்சன் கார்த்திகேயன், உபயதாரர்கள், சிவாச்சார்யார்கள் கலந்துகொண்டனர்.

திருக்கல்யாண நிகழ்வுக்குப் பின்னர் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

நாளை (ஜூன் 23) மாலை 3 மணிக்கு பிச்சாண்டவருக்கு மகா அபிஷேகம், ஜூன் 24-ம் தேதி காலை பிச்சாண்டவர் கோயில் உள் பிராகாரத்தில் புறப்பாடு (மாங்கனி இறைத்தல் வைபவம்), மதியம் காரைக்கால் அம்மையார் மாங்கனியுடன் சிவபெருமானுக்கு அமுது படைத்தல் நிகழ்வு, 25-ம் தேதி அதிகாலை அம்மையாருக்கு இறைவன் காட்சியளிக்கும் நிகழ்வு உள்ளிட்டவை எளிமையான வகையில் நடைபெறவுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here