தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு கடந்த சில நாட்களாக பத்திரிகைகளில் வரும் செய்திகளை காணும் போது தமிழகத்தில் பயங்கரவாதிகள் மற்றும் நக்சலைட்டுகளின் ஊடுருவல் மற்றும் செயல்பாடுகள் அதிகரித்து இருப்பதாக தெரிய வருகிறது. தேர்தலுக்கு முன்பாக திருநெல்வேலி பாளையங்கோட்டையில் நக்சல் நிர்வாகிகளோடு தொடர்புடையவர்கள் நடத்திய பெரியாரிச மாநாட்டில் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும் தற்போதைய தமிழக முதல்வருமான திரு ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டு காணொளி வாயிலாக பேசியதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு மாவோயிஸ்டுகள் மற்றும் பயங்கரவாதிகள் தமிழகத்தில் காலூன்ற நினைக்கிறார்களா என்று அச்சம் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.
மேற்குவங்க மாநிலத்தில் ராணுவ ரகசியங்களை கண்டறிய தொலைபேசி மூலம் பேசிய பயங்கரவாதிகள் குறித்த விசாரணையில் தமிழகத்தில் உள்ள தூத்துக்குடியில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சமீபத்தில் இலங்கையிலிருந்து ராமேஸ்வரம் மண்டபம் மரைக்காயர்பட்டணம் வழியாக தமிழகத்தில் ஊடுருவிய பயங்கரவாதிகள் மங்களூர் சென்றுள்ளனர் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது.
இதன் மூலம் சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலான தமிழகத்தின் கிழக்குக் கடற்கரையோர பகுதிகள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளதா என்கின்ற அச்சம் எழுந்துள்ளது. தமிழகத்தில் உள்ள ஒரு சில வனப்பகுதிகளில் நக்சல் ஆதரவு பயிற்சிகள் நடைபெறுவதாகவும் ஒரு சில செய்திகள் வருகின்றன. நேற்று திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மிகப் பெரிய சிமெண்ட் தொழிற்சாலையான சங்கர் சிமெண்ட் ஆலையில் பைப் வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பயங்கரவாதிகளும் மாவோயிஸ்டுகளும் கையாளக்கூடிய பைப் வெடிகுண்டுகள் சிமெண்ட் தொழிற்சாலையில் வைக்கப்பட்டது எப்படி? கடந்த சில வருடங்களுக்கு முன்பாக இந்த சிமெண்ட் நிர்வாகத்திற்கு எதிராக சில இஸ்லாமிய அமைப்பினர் போராட்டம் நடத்தியதையும் நாம் இந்த நேரத்தில் எண்ணி பார்க்க வேண்டியுள்ளது. எனவே பைப் வெகுண்டு பின்னணியில் யார் உள்ளார்கள் என ஒளிவு மறைவின்றி எவ்வித சமரசமும் விசாரணை நடத்த வேண்டும்.
தமிழகம் பயங்கரவாதிகள் மற்றும் மாவோயிஸ்ட் நக்சலைட்டுகளின் புகலிடமாக மாறி வருகிறதோ? என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
பாதுகாப்பு குறித்த விஷயங்களில் கடும் நடவடிக்கை எடுத்தால் தமிழகத்தில் ஒரு சில பிரிவினர் வருத்தப்படுவார்கள் என்கின்ற எண்ணத்தில் அவர்களை திருப்திபடுத்த தமிழக அரசு மென்மையான போக்கை கடைபிடிக்கிறதோ? என்ற எண்ணம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது நுண்ணறிவு பிரிவும், உளவுத் துறையும் இது குறித்து கூடுதல் கவனம் கொண்டு தமிழகத்தை தேசவிரோத சக்திகளிடம் தமிழகத்தை காப்பாற்ற தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாண்புமிகு தமிழக முதல்வரும் காவல்துறையும் எவ்வித பாரபட்சமும், சமரசமும் இன்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது என விபி ஜெயக்குமார் அறிக்கை வெளியிட்டு உள்ளார்.