லாகூரில் பயங்கரவாதி ஹபீஸ் சயீது வீடருகே நடந்த குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு இந்திய உளவுத் துறைதான் காரணம்’ என, பாக்., சுமத்திய குற்றச்சாட்டை, இந்தியா மறுத்துள்ளது.
பாகிஸ்தானின் லாகூர் நகரில் கடந்த மாதம் கார் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. தடை செய்யப்பட்ட ஜமாத் – உத் – தவா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீது வீடருகே நடந்த இந்த குண்டு வெடிப்பில், மூன்று பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை, இந்தியாவின் உளவு அமைப்பான, ‘ரா’ நடத்தியதாக, பாக்., தெரிவித்திருந்தது..
இது குறித்து வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறியதாவது: லாகூர் குண்டு வெடிப்பின் பின்னணியில் இந்திய உளவுத் துறை உள்ளதாக பாகிஸ்தான் ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளது. இந்தியா மீது இதுபோல ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பாகிஸ்தான் கூறுவது ஒன்றும் புதிதல்ல.
மேலும் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பது யார் என்பதை சர்வதேச சமூகம் அறியும். பாகிஸ்தான் அதன் மண்ணில் உருவாகும் பயங்கரவாத நடவடிக்கைகளை ஒடுக்க முயற்சிக்க வேண்டும். என அவர் கூறினார்.