அயோத்தியில் சர்வதேச தரத்தில் பிரமாண்ட விமான நிலையம் அமைக்கப்படும் என்றும், சரயு நதியில் தீபாவளி முதல், படகு சவாரி துவங்கும் என்றும், பிரதமர் மோடியிடம், உத்தர பிரதேச அரசு வளர்ச்சி திட்ட அறிக்கையை தாக்கல் செய்தது.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட, உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததையடுத்து, அயோத்தி ராமர் கோவிலுக்கு ஹிந்து இயக்கங்கள் பணம் வசூலித்து கொடுத்து கோவில் கட்ட உதவியாக இருந்து வருகின்றனர். அதனால் பிரமாண்ட கோவில் கட்டப்பட்டு வருகிறது. இதையடுத்து அயோத்தியை சர்வதேச ஆன்மிக சுற்றுலா தலமாக மாற்ற, பல கோடி ரூபாய் செலவில் வளர்ச்சி திட்டங்களை மேற்கொள்ள மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
அதற்கான வளர்ச்சி திட்டங்கள் குறித்து முதல்வர் ஆதித்யநாத் மற்றும் அதிகாரிகளுடன், பிரதமர் மோடி சமீபத்தில் ஆய்வு செய்தார். அப்போது அயோத்தியில் மேற்கொள்ளப்பட உள்ள திட்டங்கள் அடங்கிய அறிக்கையை பிரதமரிடம் ஆதித்யநாத் சமர்ப்பித்தார்.
அதில் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது:
* அயோத்தியில் ராமர் பெயரில் பிரமாண்டமான சர்வதேச விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது. அத்துடன், அயோத்தியில் ஓடும் சரயு நதியில் தீபாவளி பண்டிகை முதல், படகு சவாரியை துவக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன
* ராமபிரான் 14 ஆண்டுகள் காட்டில் வாழ்ந்ததை நினைவுப்படுத்தும் வகையில், அயோத்தியில் அரசு – தனியார் பங்களிப்புடன் சரயு நதிக்கரையில், ‘ராமாயண் வனம்’ உருவாக்கப்பட உள்ளது
* மேலும், 1,200 ஏக்கரில் ‘வேதிக்’ நகரம் அமைக்கப்பட உள்ளது. அங்கு டில்லி சாணக்யா புரியில் உள்ளது போல், மாநில மற்றும் வெளிநாட்டு இல்லங்கள் அமைக்கப்பட உள்ளன
* உலகத்தரம் வாய்ந்த ரயில் நிலையம் அமைக்கப்படுவதுடன், அயோத்தியில் தினமும் இரண்டு லட்சம்பக்தர்கள் வந்து தங்குவதற்கான வசதிகளும் செய்யப்பட உள்ளன
* ராமர் கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடக்கும் போது, அயோத்தியின் முகமே முற்றிலும் மாறியிருக்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.