தாயன்பு

0
281

ஆடியோ வடிவில்.

வேலம்மா, வேலம்மா என்ன ரொம்ப சந்தோசமாக இருக்கிறாய். இல்ல வசந்தி மாமி சனி ஞாயிறு இரண்டு நாள் விடுமுறை வேண்டும் பெங்களூரில் வேலை பார்க்கும் என் பொண்ணை பார்க்க போறேன். போகக்கூடிய நேரத்தில் அவளுக்கு பிடித்த ஓமபொடி செஞ்சிட்டு போறேன் ஆகையால் இன்று சீக்கிரமாக பாத்திரம் கழுவி விட்டு போகிறேன் மாமி என்று கூறிவிட்டு புறப்படுகிறாள். ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி வசந்தி மாமி வீட்டிற்குள் வேலம்மா போகிறாள். மாமி ஆச்சரியத்தோடு பார்க்கிறாள். என்னம்மா இரண்டு நாள் விடுமுறை கேட்டுட்டு போனாய் ஒரு மாதிரியா முகம் இருக்கு என்ன ஆயிற்று.

ஒன்றும் இல்லை அம்மா. நீ பல நாள் பட்டினியாக இருந்தபோது கூட வெளியே காட்டிக்காம சந்தோசமாக இருப்பாய், சொல்லு. ஏன் வருத்தத்தோடு இருக்கிறாய் சொல் என்றாள் மாமி. நான் வெள்ளிக்கிழமை மாலை இங்கிருந்து வீட்டிற்குப் போய் பலகாரம் செஞ்சிட்டு, காலை சீக்கிரம் திருச்சியிலிருந்து புறப்பட்டு பெங்களூர் போனேன். மதியம் ஒரு மணி பஸ் ஸ்டாண்டில் இருந்து இறங்கி ஐடி கம்பெனிக்கு போனேன். வழியில் மகளுடன் சேர்ந்து சாப்பிட்டு ஒரு வருடம் ஆகிவிட்டது. இன்று சாப்பிடலாம் என்ற எண்ணத்தோடு போனேன். வாசலில் செக்யூரிட்டி தடுத்து நிறுத்தினான். யாரைப் பார்க்கப் போகிறீர்கள். இங்கு வேலை பார்க்கிற மகேஸ்வரியை பார்க்க போகிறேன். இந்த புக்கில் கையெழுத்து போட்டுட்டு போங்க என்றார். நான் படிக்கவில்லை. எனக்கு கையெழுத்து போட தெரியாது கைநாட்டு வைத்துவிட்டு உள்ளே போனேன்.

அலுவலகத்தின் அறைக்கு வெளியே நாற்காலியில் உட்கார்ந்து இருந்தேன். அங்கு இருந்தபோது வழியில் இரண்டு மூன்று பேர் விசாரிக்கிறார்கள். மகேஸ்வரியை பார்க்க வேண்டும் என்றேன். சரி அம்மா உட்காருங்க. நாங்க போய் சொல்கிறோம் என்றார்கள். இதற்கிடையில் வெயிலில் நடந்து போனதால் தண்ணீர் தாகம். அங்கு விசாரித்து அதோ அங்கே இருக்கிறது. போய் குடிங்க அம்மா என்றார். ஜன்னல் பக்கம் போனேன். அங்கே இரண்டு பேர் தண்ணீர் பிடித்துக் கொண்டு இருந்தார்கள். ஆகையால் அங்கே நின்று கொண்டிருந்தேன். ஜன்னலின் மறுபுறம் மகளின் பேச்சு கேட்டது. மகளை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் அதிகரித்தது. அப்பொழுது ஒரு பெண் அவளிடம் உன்னை பார்க்க ஒரு அம்மா வந்திருக்கிறார்கள். அம்மாவா அவர் எப்படி இருப்பாள் என்றாள் மகேஸ்வரி. அவர்கள் பாவம் முகத்தில் தீக்காயம் பட்டு, முகம் ஒரு மாதிரியா இருக்கிறது என்றாள். ஓ அவளா? எங்க சொந்தக்காரங்க என்றாள்.

இவள் ஏன் இங்கு வந்தாள் என்று புலம்புகிறாள். இருப்பிடத்தை விட்டு எழுந்தாள். உடனே இன்னொரு அம்மா மகேஸ்வரி உன்னைத்தேடி ஒரு அம்மா வெளியே உட்கார்ந்து இருக்கிறாள் என்றாள். அவங்க என் பக்கத்து வீட்டு அம்மா. ஏதோ இங்கு வந்த இடத்தில் என்னை பார்க்க வேண்டும் என்று வந்திருப்பார்கள். மகேஸ்வரி மெல்ல நடந்து வருகிறாள் வழியில் ஒரு பையன் சொன்னான். உன்னை விசாரித்து ஒரு அம்மா வந்திருக்கிறாள் என்றான். அவர்களா? எங்க வீட்டு வேலைக்காரி. எதற்கு வந்திருக்கிறாள் என்று தெரியவில்லை. போய் பார்க்கிறேன் என்று வருகிறாள். இதெல்லாம் கேட்டு விட்டு தண்ணீர் குடித்து விட்டு வாசல் பக்கம் வந்தேன். உடனே மகேஸ்வரி சொல்லிவிட்டு வர வேண்டியதுதானே, ஏன்? இங்கு வந்தாய் எனக்கு இரண்டு நாள் இங்கு வேலை அதிகம்.

உங்களிடம் பேசுவதற்கு நேரம் இல்லை. கேன்டீன் போய் சாப்பிட்டு விட்டு போ என்றாள். கையில் இருந்த பொட்டலத்தையும் கொடுத்துவிட்டு எனக்கு பசிக்கவில்லை என்று கூறி விட்டு புறப்பட்டு போய்விட்டாள். எனக்கு பசி தாங்க முடியவில்லை ஆதலால் அங்குள்ள ஒரு மரத்தடியில் உட்கார்ந்தேன். மனதில் தீக்காயம் ஏற்பட்டது நினைவிற்கு வந்தது. அவளுடைய அப்பா இறந்து ஒரு மாதம் ஆனது. வீட்டில் நானும் அவளும் மட்டும் தான் இருந்தோம். அவளுக்கு அப்போது ஆறு வயது இருக்கும். பார்ப்பதற்கு என்னைப் போல அழகாக இருந்தாள். ஒரு ஞாயிற்றுக்கிழமை இரவு எட்டு மணியிருக்கும் அவளுக்கு இருந்த சாதம் ஊட்டிவிட்டு நான் தண்ணீர் குடித்துவிட்டு படுத்திருந்தேன்.

திடீரென்று அலறும் சத்தம் கேட்டது பார்க்கும் போது எரிந்துகொண்டிருந்த சிம்னி விளக்கு சாய்ந்து கிடக்கிறது. அங்கிருந்து மண்ணெண்ணெய் கீழே சிந்தி, அதுவும் எரிந்து மகேஸ்வரி பாவாடை எரிந்து கொண்டிருந்தது. உடனே தீயை போராடி அணைத்தேன் ஆனால் அந்த தீ என் மீது பட்டு நான் எரிந்து கொண்டிருக்கிறேன். சத்தம் கேட்டு பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் தீயை அணைத்து ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று காப்பாற்றினார்கள். அவளை காப்பாற்ற போனதில் என்னுடைய முகம் எல்லாம் எரிந்து நான் இன்று இப்படி அருவருப்பாக இருக்கிறேன். நான் இவளை விட அழகாக தான் இருந்தேன். எப்படி எல்லாம் கஷ்டப்பட்டு வளர்த்தேன். தன்னார்வு தொண்டு நிறுவனம் மூலம் ஆண்டாள் கல்லூரியில் எம் எஸ்சி படிக்க வைத்தேன். எத்தனையோ நாள் அவளுக்கு உணவு கொடுத்துவிட்டு சாப்பிடாமல் இருந்திருக்கிறேன்.

அப்படிப்பட்ட மகள் இன்று இப்படி சொல்லி விட்டாளே. தீக்காயத்தினால் இப்படி அழகில்லாமல் இருக்கிறேன் அவளுக்கு அம்மா என்று சொல்ல வெட்கமாக இருக்கிறது. நான் யாருக்காக வாழ்கிறேன். எங்கேயாவது போய் இறந்து விடுவோமா? என்றெல்லாம் நினைத்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது பக்கத்து மரத்தடியில் ஒரு ஆண், பெண் பேசிக்கொண்டிருந்தார்கள். தீபக், போரடிக்கிறது நாளைக்கு விடுமுறை நாம் இன்று ஜாலியாக வெளியே எங்கேயாவது போவோம். ஹோட்டல் போய் சாப்பிட்டு விட்டு தங்கிவிட்டு திங்கள் காலையில் வேலைக்கு போவோம் என்றாள். அவனோ வேண்டாம் மகேஸ்வரி, என்றான். வலுக்கட்டாயமாக நீ வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயப் படுத்தினாள்.

என்னிடம் காசு இல்லை என்றான். அவள் நான் உன்னிடம் காசு கேட்டேனா என்றாள். சரி என்று சொல்லிவிட்டு இரண்டு பேரும் போகிறார்கள். இதைக் கேட்டவுடன் எனக்கு பசி நீங்கியது. கடவுளே! இதற்காகத்தான் இவளை கஷ்டப்பட்டு வளர்த்தேனா? என்று நினைத்து அங்கிருந்து புறப்பட்டு, நேராக வீட்டிற்கு இரவே வந்து சேர்ந்தேன். இரவில் தூக்கம் இல்லை. என்ன வாழ்க்கை இது. ஏன்? வாழ வேண்டும் என்று தோன்றுகிறது மாமி என்றாள். காலம் மாறிவிட்டது அப்படித்தான் இருக்கும். என்றைக்காவது அவளுக்கு புத்தி வந்து வருந்துவாள் என்றாள் மாமி. வேலை முடிந்து வீட்டிற்கு புறப்பட்டார் வேலம்மாள். சிறிது நேரத்தில் மாமி வீட்டிற்கு போன் வந்தது. உங்கள் வீட்டில் வேலை செய்யக்கூடிய வேலம்மாள் மகள் ஆக்சிடெண்ட் ஆகிவிட்டாள். பெங்களூரில் எய்ம்ஸ் மருத்துவமனையில் ஐசியூவில் இருக்கிறாள் என்று சொல்லி கட் பண்ணினாள். இந்த செய்தி வேலம்மாளிடம் தெரிவிக்கப்படுகிறது. அதுவரைக்கும் மகள் மீது பயங்கரமான கோபத்தில் இருந்தாள். செய்தி கிடைத்தவுடன் பெங்களூரு இரவோடு இரவாக புறப்படுகிறாள். அங்கே செல்கிறாள். மரத்தடியில் நேற்று பார்த்த பையன் அங்கு நின்று கொண்டிருந்தான். அவள், அவனிடம் விசாரித்தாள். நாங்கள் இருவரும் பைக்கில் போய்க் கொண்டு இருந்தோம். ஸ்பீட் பிரேக்கில் வண்டியில் இருந்து தூக்கி எறியப்பட்டு கீழே விழுந்தாள். பின்னால் வந்த வண்டி ஏறி இறங்கி வலது கைவிரல் இரண்டு துண்டாகி விட்டது மற்றும் தலையிலும் அடிப்பட்டது. அதனால் ஐசியூவில் இருக்கிறாள் 24 மணி நேரம் கழித்துதான் சொல்லமுடியும் என்றார்.

வேலம்மாள் எல்லா கடவுளையும் வேண்டிக் கொண்டு அழுது கொண்டு இருந்தாள். கடவுள் அருளால் நினைவு வந்தது. 10 நாளில் டிஸ்சார்ஜ் ஆகி திருச்சிக்கு வந்தாள். மீண்டும் பழைய ஓலைக் குடிசையில் இருக்க வேண்டிய சூழ்நிலை. அடிக்கடி கம்பெனி ஞாபகம் வருகிறது. அம்மா அன்று என்னை பார்க்க வந்தபோது, அம்மா அழகாக இல்லையே என்று, சக ஊழியரிடம் உறவினராகவும், பக்கத்து வீட்டுக்காரியாகவும். அதைவிட வேலைக்காரியாகவும் தவறுதலாக சொல்லிவிட்டேனே, என்று அம்மாவிடம் மன்னிப்பு கேட்கிறாள்.

இது எல்லாம் கடவுள் தண்டனை. எனக்கு இப்பொழுது வலது கையில் இரண்டு விரல் இல்லாமல் ஆகிவிட்டது என்று மீண்டும் அழுகிறாள். அம்மா, நீ கவலைப்படாதே நான் அதை அன்றே மறந்து விட்டேன். நீ உன் உடம்பை கவனித்து வேலைக்கு போய் நன்றாக இரு, என்றாள். இல்லை அம்மா, நான் இனி உயிரோடு இருக்கும் வரை நீ என்னோடு தான் இருக்க வேண்டும். எனக்கு திருமணம் ஆனாலும் நீ எங்களோடு தான் இருக்க வேண்டும் என்று கூறிவிட்டு, பெங்களூரில் வீடு பார்த்து அம்மாவையும் அழைத்து செல்கிறாள்.

சாதனா அ.சுரேஷ்
ayyappan.suresh66@gmail.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here