கேரளாவில் பக்ரீத் பண்டிகைக்காக சிறப்பு ஊரடங்கு தளர்வுகள் அளித்தது குறித்து பதிலளிக்க கேரளா கம்யூனிஸ்ட் அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்.
கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி நடக்கிறது. தற்போது பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, 18, 19, 20ம் தேதி வரை கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தி, பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார். இதன்படி கொரோனா பாதித்த மூன்று மண்டலங்களில் ஜவுளி, நகை, வீட்டு உபயோகப் பொருட்கள் உள்ளிட்ட கடைகளை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
கேரள அரசின் இந்த உத்தரவை எதிர்த்து டில்லியைச் சேர்ந்த பி.கே.டி.நம்பியார் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்; அதில் கூறப்பட்டுள்ளதாவது: நாட்டிலேயே கேரளாவில் தான் கொரோனா பாதிப்பு, 10 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. உத்தர பிரதேசம், டில்லியில் முறையே, 0.02 மற்றும் 0.07 சதவீதம் தான் உள்ளது. அரசியல் ஆதாயத்திற்காக, கட்டுப்பாடுகளை தளர்த்தி மக்களின் வாழ்வுடன் அரசு விளையாடுகிறது. எனவே தளர்வை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.எப்.நாரிமன் தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கேரள அரசை உடனடியாக பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட அமர்வு, விசாரணையை இன்று தள்ளி வைத்துள்ளது.