உப்பு சத்தியாகிரக தியாகிகள் நினைவு கல்வெட்டை மீண்டும் அமைக்க வேண்டும் என இந்துமுன்னணி மாநில துணைத் தலைவர் வி.பி.ஜெயக்குமார் அரசுக்கு கோரிக்கை.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் பகுதியில் 1942 ஆம் ஆண்டு இந்திய விடுதலைப் போராட்டத்தில் காந்திஜி அவர்களின் அழைப்பை ஏற்று உப்பு சத்தியாகிரகம் போராட்டத்தில் குலசேகரப்பட்டினம் உப்பளம் பகுதியில் அப்போது உதவி உப்பு ஆய்வாளராக இருந்த லோன் துரை என்ற வெள்ளைக்கார அதிகாரி, காசிநாதன் ராஜகோபால் உள்ளிட்ட 11 சுதந்திர போராட்ட வீரர்களால் படுகொலை செய்யப்பட்டார். இது இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் குலசேகரப்பட்டினம் சதி வழக்கு என சொல்லப்படுகிறது.
இந்த வழக்கில் ராஜகோபால் என்பவருக்கு தூக்கு தண்டனையும் மற்றவர்களுக்கு வெவ்வேறு தண்டனையும் வழங்கப்படுகிறது. பின்னர் இந்தியா விடுதலை பெற்ற பின்பு அவர்கள் விடுதலை செய்யப்படுகிறார்கள் தூக்குமேடை வரை சென்றதால் அவர் தூக்கு மேடை ராஜகோபால் என்று பின்னாளில் அழைக்கப்பட்டார். அந்த விடுதலை போராட்ட வீரர்கள் 11 நினைவாக குலசேகரப்பட்டினத்தில் பெருமாள் கோவில் எதிரில் அவர்களது பெயர் தாங்கிய கல்வெட்டு மற்றும் சிறிய மணிமண்டபம் இருந்தது. ஆனால் தற்போது அந்த மணி மண்டபத்தில் இருந்த கல்வெட்டுகள் மர்மநபர்களால் உடைக்கப்பட்டு அகற்றப்பட்டுள்ளது. இது மிகுந்த வேதனைக்குரியது விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு செய்யப்பட்டுள்ள மிகப்பெரிய அவமரியாதை ஆகும். இந்திய விடுதலைப் போராட்டத்தின் 75வது ஆண்டு விழாவினை மிகச் சிறப்பாக கொண்டாடும் வேளையில் மீண்டும் அதே இடத்தில் அந்த குலசேகரப்பட்டினம் உப்பளம் போராட்டத்தில் பங்கேற்ற 11 பேரின் பெயர் தாங்கிய கல்வெட்டுக்களை அமைத்து, அவர்களுக்கு அரசு மரியாதை செய்ய வேண்டும் என இந்து முன்னணி கோரிக்கை வைத்துள்ளார் வி.பி.ஜெயக்குமார் அவர்கள்.