காஞ்சிபுரம் ஓரிக்கையில் அமைந்துள்ள மஹா சுவாமிகள் மணி மண்டத்தில் ஓவியர் ஏ.மணிவேலு வரைந்த பல்வேறு ஹிந்து கோயில் சுவாமி ஓவியங்கள் கண்காட்சி நேற்று துவக்கப்பட்டது.
கண்காட்சியை ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் முன்னிலையில் சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மஹாவித்யாலாயா நிகர்நிலை பல்கலை துணைவேந்தர் ராகவன் திறந்து வைத்தார். கண்காட்சி அடுத்த மாதம் 20ம் தேதி வரை நடைபெறுகிறது. ஓவியர் மணிவேலு தமிழகத்தில் உள்ள பழமையான அனைத்து கோவில்களிலும் அனுமதி பெற்று மூலவர் உருவத்தை தத்ரூபமாக வரைவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
மணிவேலு கூறியதாவது:எனது ஊர் சிக்கல். பரம்பரை பரம்பரையாக சிற்பம் தொழில் செய்து வந்தவர்கள். அதன் வழியில் வந்த நான் என் தந்தையிடம் கலையின் நுணுக்கங்களை கற்றுக்கொண்டேன்.ஒரு படம் வரைவதற்கு குறைந்த பட்சம் 25 நாட்கள் முதல் மூன்று மாதங்கள் வரை ஆகும். 1980 முதல் சுவாமி ஓவியங்கள் வரைய துவங்கினேன். இது வரை 500 ஓவியங்கள் வரைந்துள்ளேன். இதற்கு முன் தஞ்சாவூரில் என் ஓவிய கண்காட்சி வைக்கப்பட்டது.
ஒவ்வொரு கோயிலாக சென்று அந்த ஊரில் தங்கி கோயிலின் சுவாமியை பற்றி முழுமையாக அறிந்து கொண்டு மூலவரை வரைவதற்கு அனுமதி பெற்றுவரைவேன்.
கடைசியாக திருவண்ணாமலை அண்ணாமலை சுவாமியை வரைந்துள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த கண்காட்சிக்கு ‘சென்னை டாட் ஸ்கூல் ஆப் டிசைன்’ ஏற்பாடு செய்திருந்தது.