கட்டுமானத் தொழிலாளர்கள், புலம்பெயர் தொழிலாளர்கள், சாலையோர விற்பனையாளர்கள் என பாரதப் பொருளாதார வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றும் இவர்களுக்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், வருவாயைப் பெருக்கவும் அரசு தரப்பிலிருந்து பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் அத்திட்டங்கள் சரியாக இவர்களைச் சென்று சேர்வதில்லை. அதேபோல, இவர்களின் பணி நிலவரம், தொழிலாளர்களின் நிலை குறித்த சரியான புள்ளி விவரங்களும் இல்லை. அதற்காகவே மத்திய அரசு ‘இ-ஷ்ரம்’ (e-shram)என்ற பெயரில் புதிய இணையதளத்தை உருவாக்கியுள்ளது. இதில் அமைப்பு சாராத் தொழிலாளர்கள் அனைவரின் பணி விவரங்கள், பல்வேறு துறைகளில் பணியாற்றும் தொழிலாளர்களின் எண்ணிக்கை, அவர்களுக்கான சமூக நலத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு கணக்கெடுப்புகள் இடம் பெற்றிருக்கும். அமைப்பு சாராத் தொழிலாளர்களுக்கான சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் அவர்களை நேரடியாகச் சென்று சேர இத்திட்டம் உதவும். இதில் 38 கோடி அமைப்பு சாராத் தொழிலாளர்களைப் பதிவு செய்யவைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனுடன் ‘14434’ என்ற இலவச தொலைபேசி எண்ணும் துவக்கப்பட்டுள்ளது. இதில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படும். தொழிலாளர்கள் தங்களது ஆதார் எண், வங்கிக் கணக்கு ஆகிய விவரங்களை பதிவுசெய்யலாம் என்பது உள்ளிட்ட ஏராளமான அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.