உளவுத்துறையில் நீண்ட அனுபவம் பெற்ற ஆர்.என்.ரவி தமிழக புதிய ஆளுநராக நியமனம்.

0
531

தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள உளவுத்துறை முன்னாள் உயரதிகாரியான ஆர்.என். ரவி, காவல் பணியிலும் நிர்வாகப் பணியிலும் தேர்ந்த அனுபவம் பெற்றவராக அறியப்படுகிறார். தற்போது அவர் நாகாலாந்து ஆளுநராக பதவி வகித்து வருகிறார்.

பிகாரில் உள்ள பாட்னாவில் பிறந்த ஸ்ரீ ரவீந்திர நாராயண் ரவி, 1974 இல் இயற்பியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். கல்லூரி படிப்பை முடித்ததும், சில காலம் பத்திரிகைத் துறையில் பணியாற்றிய இவர், 1976இல் இந்திய காவல் பணியில் சேர்ந்தார். அவருக்கு கேரளா பிரிவு ஒதுக்கப்பட்டது.

அங்கு அவர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக மாவட்ட கண்காணிப்பாளர், காவல் துணைத் தலைவர் உட்பட பல்வேறு பதவிகளில் பணியாற்றினார், பின்னர் மத்திய அரசுப் பணிக்கு மாற்றலாகி நாட்டின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றினார்.

மத்திய புலனாய்வுத்துறை பணியின்போது, நாட்டில் சுரங்க மாஃபியாக்கள் உட்பட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களுக்கு எதிராக பல ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளை கடுமையாக மேற்கொண்டார். இந்தியாவின் உளவுத்துறையான இன்டலிஜென்ஸ் பியூரோவிலும் இவர் பணியாற்றியுள்ளார்.

அந்த பணியில் இருந்தபோது, இவர் ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இயங்கி வந்த குழுக்களை ஒடுக்கும் நடவடிக்கையில் மூளையாக செயல்பட்டார். உளவுத்துறையில் சிறப்பு இயக்குநராக இருந்தபோது, ஐ.பி இயக்குநராக இருந்தவர் அஜித் தோவால். அவர்தான் தற்போது பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருக்கிறார். அந்த வகையில் தோவாலுக்கும் ஆர்.என். ரவிக்கும் நெருக்கமான புரிந்துணர்வு உள்ளது.

அந்த பணியின்போது தெற்காசியாவில் மனிதர்களின் பூர்விக குடியேற்றத்தின் இயக்கவியலில் நிபுணத்துவம் பெற்றார். எல்லையோர மக்களின் அரசியல், சமூகவியலில் ஏற்படும் தாக்கங்களை அவர் காவல் நோக்கில் ஆராய்ந்து அரசு பல திட்டங்களை வகுக்க காரணமாக இருந்தார்.

இனக் கிளர்ச்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மோதல் நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வரும் பணியில் அவர் முக்கியப்பங்காற்றினார்.

2012இல் அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, அவர் தேசிய நாளிதழ்களில் தேசிய பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்புடைய நிகழ்வுகளை தமது அனுபவங்களுடன் ஒப்பிட்டுக் கட்டுரைகளை எழுதி வந்தார்.

பின்னர் அவர் பிரதமர் அலுவலகத்தில் மத்திய உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு உளவு அமைப்புகளை ஒருங்கிணைக்கும் பணிக்காக நியமிக்கப்பட்ட கூட்டு புலனாய்வு குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார்,

அங்கு புலனாய்வு சமூகத்தின் தலைவராகவும், நாட்டின் உளவுத்துறை தேவைகளை பூர்த்தி செய்யும் அமைப்புகளையும் ஒருங்கிணைத்து வழிகாட்டியாக செயல்பட்டார்.

2014ஆம் ஆண்டில் மத்தியில் நரேந்திர மோதி தலைமையில் புதிய அரசு அமைந்த சில மாதங்களில், அதே ஆண்டு ஆகஸ்ட் 29ஆம் தேதி, நாகாலாந்தில் நாகா சமாதான பேச்சுவார்த்தைக்கான மையத்தின் மத்தியஸ்தராக ரவி நியமிக்கப்பட்டார்.

அதைத்தொடர்ந்து, 2018ஆம் ஆண்டு அக்டோபரில் அவர் தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் அவர் நாகாலாந்து ஆளுநராக பதவி வகித்து வருகிறார். பதவியேற்ற இரண்டு ஆண்டுகளில் அவர் தமிழக ஆளுநராக தற்போது இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here