சரஸ்வதி பூஜை

0
535

நவராத்திரி நாடு முழுவதுமுள்ள ஹிந்துக்களால் மிக சிறப்பாக கொண்டாடப்படும் விழாக்களில் ஒன்று. ஒரு மனிதனின் உடல் வளர்ச்சிக்கு வலிமையும், வளமான வாழ்க்கைக்கு செல்வமும், அறிவு வளர்சிக்கு கல்வியும் மிகவும் அவசியம். அவ்வாறு உடல் வலிமையை வெளிப்படுத்தும் சக்தியாக அன்னை பார்வதி தேவியையும், வாழ்க்கைக்கு தேவையான செல்வ வளத்தை அளிக்கும் மகாலட்சுமி தேவியையும், அறிவையும் நல்ல பல கலைகளையும் தரக் கூடிய கல்வியின் அதிபதியான சரஸ்வதி தேவியையும் வழிபட்டு, அந்த முப்பெரும் தேவியரின் அருளைப் பெற்று வலிமை, செல்வம், கல்வி ஆகிய மூன்றையும் பெறுவதற்காக கொண்டாடப்படும் விழா நவராத்திரி.

முப்பெரும் தேவியரான லட்சுமி, பார்வதி , சரஸ்வதி ஆகிய தெய்வங்களை வாழ்த்தி வணங்கும் இவ்விழாவில், 9ம் நாளான இன்று கொண்டாடப்படும் சரஸ்வதி பூஜை அல்லது ஆயுத பூஜையை மக்கள் கல்வி பயிலும் இடங்கள், வீடுகள், தொழில் செய்யும் இடங்களில் கொண்டாடுகின்றனர். கல்வியுடன் கலைகளுக்கும் உரியவள் அன்னை சரஸ்வதி. உயிருள்ள, உயிரற்ற பொருட்களிலும் அன்னை நீக்கமற நிறைந்திருப்பதால், ஆயுத பூஜையுடன் சரஸ்வதி பூஜையும் சேர்த்து கொண்டாடப்படுகிறது.

தொழில் செய்யும் இடத்தில் தொழிலுக்கு பயன்படுத்தப்படும் கருவிகளுக்கு பூஜை செய்வது ஆயுத பூஜை என்றும், படிக்கும் புத்தகம், அதற்கு பயன்படுத்தும் பொருட்கள் அனைத்திற்கும் பூஜை செய்வது சரஸ்வதி பூஜை என்றும் கொண்டாடப்படுகிறது. அவ்வாறு தொழில் செய்யும் இடங்களில் உள்ள பொருட்களுக்கு அன்றைய தினம் பூஜை செய்ய வேண்டும். முதலில் அந்த பொருட்களை தண்ணீரில் கழுவி அவற்றுக்கு சந்தனம் குங்குமம் பொட்டு வைக்க வேண்டும். பின்னர் நாம் தொழில் செய்யும் இடத்தை சுத்தம் செய்து அலங்காரம் செய்து வாழை இலை போட்டு அவல், பொரி கடலை, பழங்கள் படையலிட்டு, ஆயுதங்களைளையும் அவ்விடத்தில் வைத்து தீபம் ஏற்றி பூஜை செய்ய வேண்டும்.

நாம் தொழில் செய்யும் இடத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் அன்றைய தினம் நம்மால் முடிந்த சலுகைகளை செய்யலாம். இதனால் அவர்கள் மன திருப்தியும் சந்தோஷமும் அடைவார்கள். இதனால், நமது தொழிலும் மேலோங்கி வளரும், லாபம் தரும் என்பது நம்பிக்கை. மேலும், புதிதாகத் தொழில், கல்வி உட்பட எதைத் துவங்கினாலும் அதனை ஆயுத பூஜைக்கு மறுநாளான விஜய தசமியன்று துவங்கினால் அவை சிறப்புடன் நடக்கும் என்பதும் ஐதீகம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here