பயங்கரவாதிகள் எல்லையை தாண்டி பாரதத்திற்குள் ஆயுதங்களை கொண்டு செல்ல முயற்சிப்பதாக பஞ்சாப் காவல்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, காவல்துறையும் எல்லை பாதுகாப்புப் படையும் இணைந்து தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டன. அப்போது, கெம்கரன் அருகே பாரத பாகிஸ்தான் எல்லையில் உள்ள முள்வேலி வழியாக கடத்தப்படவிருந்த 22 வெளிநாட்டு கைத்துப்பாக்கிகள், 100 குண்டுகள், 44 மேகசின்கள், 1 கிலோ ஹெராயின் மற்றும் 72 கிராம் அபின் ஆகியவை கைப்பற்றப்பட்டன. இவை டிரோன்கள் மூலம் கடத்தப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. எல்லை பாதுகாப்புப் படைகளின் அதிகாரத்தை எல்லையில் இருந்து தற்போதுள்ள 15 கி.மீ என்ற வரம்பில் இருந்து 50 கி.மீ வரை சமீபத்தில் மத்திய அரசு விரிவுபடுத்திய சில நாட்களில் இந்த ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.