சுவாமி ராமதீர்த்தர்

0
122

”இறைவனுடன் ஒன்றுபட விரும்புகிறாயா? அப்படியெனில், இந்த தேசத்தின் இதயத்துடன் ஒன்றிப்போ. இம்மண்ணில் வாழும் ஒவ்வொரு ஜீவனுடனும் உன்னை ஐக்கியப்படுத்திக் கொள். உன்னைப் பேணி வளர்க்கும் இத்தேசத்தை நீ ஏன் தெய்வமாகப் பேணக் கூடாது?” என்று மக்களிடம் எடுத்துரைத்தார் சுவாமி ராம தீர்த்தர். கோசைன் தீர்த்த ராமா பஞ்சாபில் 1873ல் பிறந்தார். கணிதப் பேராசிரியரான இவர், ஸ்ரீமாதவ தீர்த்தரிடம் வேதாந்தம் பயின்றார். அவரின் அனுமதியுடன், துறவு மேற்கொண்டு சுவாமி ராமதீர்த்தராக மாறினார்.

ஒருமுறை சுவாமி விவேகானந்தரை தனது வீட்டிற்கு அழைத்து விருந்தளித்தார். விவேகானந்தருக்கு ஒரு கடிகாரத்தை இவர் பரிசளிக்கவே, அதை அவர் சட்டைப் பையிலேயே மாட்டிய சுவாமிஜி, “இதை, நான் இங்கேயே அணிகிறேன்” என்று கூறிய வேதாந்த கருத்துகள் உலகப்புகழ் பெற்றவை. இதுவே, ராமதீர்த்தரின் வாழ்வில் திருப்பு முனையானது. துறவு மனப்பான்மை வலுத்தது.

மக்களிடம், ”ஓர் ஆன்மிக வீரனாக வாழ். ஆணவத்தைக் களைந்து, இந்நாட்டுக்காக உயிரை அர்ப்பணி. நாட்டுக்காக உன் இதயம் துடித்தால், உனக்காக நாடே துடிக்கும். நட, நாடே உன்னைப் பின் தொடரும். இதுதான் நடைமுறை வேதாந்தம்” என சொல்வார். ஜப்பான், அமெரிக்கா என்று பல உலக நாடுகளுக்கும் பயணித்தார். ஒளி பொருந்திய அவர் எங்கு சென்றாலும் மக்கள் வரவேற்பு அளித்தனர். அமெரிக்கர்கள் இவருடைய பொலிவு கண்டு ஏசுவோ என வியந்தனர். சென்ற இடங்களிலெல்லாம் சொற்பொழிவுகள் நிகழ்த்தியதோடு, நற்பணி அமைப்புகளையும் உருவாக்கினார். குர் ஆனில் ‘ஓம்’ உள்ளது என்ற இவரது சொற்பொழிவு முஸ்லீம்கள் வியந்து போற்றிய ஒன்று. கணிதத்தில் கடவுளைக் கண்ட இவரின் உருவகங்கள் பிரமாதமானவை.

பஞ்சாபி, உருது, சமஸ்கிருதம், ஆங்கிலம் என பல மொழிகளில் புலமை பெற்ற இவர், 33 ஆண்டுகளே வாழ்ந்தார். கங்கையில் குளிக்கும்போது, சுழல் இவரை இழுக்க, “அம்மா! உன் விருப்பம் அதுவானால் அது சரியே!” எனகூறி ஜல சமாதி எய்தினார். ஜல சமாதிக்கு முன்னர் அவர் எழுதிய துண்டுச் சீட்டில், “மரணமே, வா! என்னை உன்னால் ஒன்றும் செய்ய முடியாது. நான் எங்கும் இருப்பவன்” என்று எழுதி வைத்திருந்தார். 19ம் நூற்றாண்டில் பாரதத்தின் ஆன்மாவையும், மக்களையும் விழிப்புறச் செய்வதற்காகவே பிறந்த மகான் சுவாமி ராம தீர்த்தர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here