தேசபந்து சித்தரஞ்சன் தாஸ்

0
254

வங்கதேசத் தலைநகர் தாகா அருகே விக்ரம்பூரில் பிறந்தார் சித்தரஞ்சன் தாஸ். மாணவப் பருவத்திலேயே விடுதலை இயக்கத்தில் பங்கேற்றார். இங்கிலாந்தில் பாரிஸ்டர் பட்டம் பெற்று தாயகம் திரும்பினார். கல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார். தீவிர அரசியலில் ஈடுபட்டு, இந்திய தேசிய காங்கிரஸில் முக்கியத் தலைவராக உயர்ந்தார். ‘தேசபந்து’ (தேசத்தின் நண்பன்) என்று அழைக்கப்பட்டார். இவரை தன் அரசியல் குருவாகப் போற்றினார் சுபாஷ் சந்திரபோஸ்.

அசாம் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் விவகாரம், ரயில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் போன்ற போராட்டங்களில் பங்கேற்றார். திலகருடன் நெருக்கமாகப் பணியாற்றினார். ‘கேசரி’ இதழின் ஆசிரியராகவும் சிலகாலம் பணியாற்றினார். 1920ல் இவரது மாத வருமானம் ரூ. 50 ஆயிரம். பின்னாளில் ஒரு வழக்கு நடத்த ரூ. 1 லட்சம் வரை கட்டணம் வாங்கினார். ஆனால், சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட, தனது வழக்கறிஞர் தொழில், வசதியான வாழ்க்கையைத் தியாகம் செய்தார். வேல்ஸ் இளவரசர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இவரது ஒட்டுமொத்த குடும்பமும் கைது செய்யப்பட்டது.

ஒத்துழையாமை இயக்கத்தை காங்கிரஸ் கைவிட்டதால் அதிருப்தி அடைந்து, 1922-ல் சுயராஜ்ஜியக் கட்சியைத் தொடங்கினார். இதன் கொள்கைகளைப் பரப்ப ‘ஃபார்வர்டு’, ‘பங்களாசுதா’ ஆகிய பத்திரிகைகளைத் தொடங்கினார். 1923ல் நாடாளுமன்ற கௌன்சில் உறுப்பினரானார். 1924ல் நடந்த கல்கத்தா மாநகராட்சித் தேர்தலில் இவரின் சுயராஜ்ஜியக் கட்சி வெற்றி பெற்றதை அடுத்து சித்தரஞ்சன் தாஸ் மேயரானார். கிராமப் பஞ்சாயத்து, கிராம சுயாட்சி ஆகியவற்றை அப்போதே தனது ஐந்து அம்ச திட்டத்தில் கொண்டுவந்தார்.

அரவிந்தரும் சித்தரஞ்சனும் சுதந்திரப் போராட்ட இயக்கமான அனுஷீலன் சமிதியின் துணைத் தலைவர்கள்.1909ல் அலிப்பூர் குண்டுவெடிப்பு வழக்கில் வாதாடி அரவிந்தருக்கு விடுதலை பெற்றுத் தந்தார். பெண்கள் முன்னேற்றத்துக்காகப் பாடுபட்டார். ஈஸ்வர் சந்திர வித்யாசாகரின் விதவை மறுமண இயக்கத்துக்கு உதவினார். தொழிற்சங்கங்கள் மூலம் தொழிலாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று முழங்கினார்.

இலக்கியத்தில் ஆர்வம் கொண்ட இவர், சாகர் சங்கீத் கவிதைத் தொகுப்பு, நாராயண்மாலா, கிஷோர் கிஷோரி, அந்தர்யாமி உள்ளிட்ட புத்தகங்கள், திலகர் குறித்து பல நூல்கள் எழுதியுள்ளார். தன் ஈகை குணத்தால் ஏழையான வள்ளல் இவர். தன் வீட்டையும் அதைச் சுற்றியுள்ள நிலங்களையும் ஆதரவற்ற பெண்களின் நலனுக்காக எழுதி வைத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here