பிரதமராக பதவியேற்றது முதல் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கேதார்நாத் கோயிலுக்கு பலமுறை சென்று வழிபட்ட பிரதமர் மோடி, நேற்று மீண்டும் கேதார்நாத் சென்று சாமி தரிசனம் செய்தார். வேத மந்திரங்கள் முழங்கிட சிவனுக்கும், நந்திக்கும் ஆரத்தி எடுத்து சிறப்பு வழிபாடு நடத்தினார். மேலும், கேதார்நாத் கோயில் அருகே 12 அடி உயரமும், 35 டன் எடையுடன் நிறுவப்பட்ட ஆதி சங்கரரின் கற்சிலையையும் திறந்துவைத்தார். முன்னதாக, உத்தரகண்டில் 2013ல் ஏற்பட்ட வெள்ளத்தின் போது கேதார்நாத் கோயில் சேதம் அடைந்தது. கோயில் அருகே இருந்த ஆதி சங்கராச்சாரியார் சமாதி வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. கோயில் மற்றும் சமாதியை புணரமைக்கும் பணியை ரூ. 500 கோடி செலவில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து செய்து வருகின்றன. தமிழகத்தில் ஆதிசங்கரருடன் சம்பந்தப்பட்ட 16 கோயில்கள் உள்ளன. நேற்று மோடி கேதார்நாத்தில் ஆதிசங்கரரின் புதுப்பிக்கப்பட்ட சமாதியை அர்ப்பணித்து வழிபட்டபோது இந்த 16 கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன என்பது சிறப்பு. குளிர் காலத்தை முன்னிட்டு இன்றுடன் கேதார்நாத் கோயில் மூடப்படுகிறது. மீண்டும் ஆறு மாதங்கள் கழித்தே இக்கோயில் திறக்கப்படும்.