பயிர் சுழற்சிமுறை:
நிலத்தில் ஒரே வகையான பயிர்களை பயிரிடாமல் சுழற்சி முறையில் பயிரிட வேண்டும்
இயற்கை வேளாண்மையின் முக்கிய அம்சமான பயிர் சுழற்சி முறையை நம் முன்னோர்கள் முறையாக செய்தனர். முதல் பருவத்தில் நெல், அடுத்த பருவத்தில் உளுந்து, அதற்கடுத்து பயறுவகைகள் என மாறி மாறி பயிரிட்டனர். பயிர் சுழற்சி முறையினால் மண்ணின் வளம் கூடும் என நன்கு தெரிந்திருந்தனர்.
இயற்கை வேளாண்மையில் சம்பா நெல்லுக்கு பிறகு உளுந்து, குறுவை நெல்லுக்கு பிறகு தாளடி நெல், அதற்கு பிறகு சம்பா நெல் அதனூடே சணப்பு இப்படித்தான் மாற்றி மாற்றி பயிர் செய்ய வேண்டும். முதலில் சணப்பு விளைந்த பின் அதன் விதையை நீக்கி மூடாக்கி போட்டால் நல்லதொரு உரமாக மாறும். இன்று நம் விவசாயிகள் இதே முறையை பின்பற்றுகின்றனர்.
பயிரின் வளத்தை தீர்மானிப்பது மேல் மண்ணாகும், மேலும் நிலத்தை சில நாட்கள் தரிசாக போட்டு வைத்தோமென்றால், களைத்துபோன நிலம் புத்துயிர் பெறுகிறது. பல்லாயிரம் வருடங்களாகவே இந்த யுக்தியை நம் முன்னோர்கள் கடைப்பிடித்து வந்துள்ளனர், இப்படி மண்ணை தரிசாக போட்டு வைக்கும் போது அம்மண்ணில் கொழிஞ்சி, அவுரி, கரந்தை உள்ளிட்ட செடிகள் முளைத்து ஈரத்தை தக்க வைக்கின்றன, மேலும் பயிர் விளைவிக்க அந்த மண்ணை உழும் பொழுது அச்செடிகளை மடக்கி போட்டால் நல்லதொரு உரமாக மாறுகின்றது.
கலப்பு பயிர்களின் நன்மை:
பழங்காலத்திலிருந்தே நம் முன்னோர்கள் பலதரப்பட்ட பயிர் வகைகளை கலந்து பயிரிட்டு வந்தனர், இப்படி கலந்து பயிரிடுவதால் ஒரு செடியின் தேவையை மற்றொரு செடி நிறைவேற்றும். எடுத்துக்காட்டாக தக்காளி மற்றும் சணப்பு கலந்து பயிரிட்டனர். இதன் மூலம் தக்காளி மகசூல் கூடியது, சோளத்துடன் தட்டை பயிரை கலந்து பயிரிடும் போது தட்டை பயிரின் நெடி சோளத்தைத் தாக்கும் தண்டு தாக்குதல் நோயைத் தடுக்கும்.
பருத்தியை தாக்கும் காய் புழுக்கள் பருத்தியை தாக்கிவிட்டு ஒரு செடியிலிருந்து மற்றொன்றுக்குத் தாவுகின்றது. அடுத்த செடியில் அவை வேறு வித சுவையையும் தன்மையயும் உணருகின்றன, இதனால் அதற்கடுத்த செடிக்கு தாவுகின்றன. அங்கும் அவை வேறு சுவையை உணர்வதால் ஒவ்வாமை நோய் ஏற்பட்டு வயல்களை விட்டே ஓடிவிடுகிறது, மேலும் கலப்பு பயிரான பாசிப்பயிறு, மொச்சை போன்றவற்றை அறுவடை செய்தபின் அவற்றை மூடாக்கி போட்டால் மண்ணிற்கு வளமும் கூடுகின்றது, தென்னை மரத்திற்கு நடுவே பப்பாளி, பாக்கு ஆகியவற்றை கலப்பு பாயிராக நடலாம். இன்று மரபணு மாற்றப்பட்ட பருத்தி, கத்திரியைப்பற்றி பல சர்ச்சைகள் கிளம்பும் இந்நேரத்தில் நம் விவசாயிகள் இயற்கை முறையில் பருத்தியை விளைவிப்பதும், அதன் காய் புழுக்களை கட்டுப்படுத்துவதும் நம் இயற்கை வேளாண்மை முறையால் தான் சாத்தியமாயிற்று. இதுபோல் கலப்புப்பயிர் முறையில் பல நன்மைகள் உள்ளன.
நந்திஹனுமன்
nanthihanuman@gmail.com