பலிகடா ஆக்கப்பட்டாரா இயக்குனர்?

0
697

உண்மை சம்பவம் எனகூறி வெளியான ‘ஜெய்பீம்’ திரைப்படத்தில் ஒரு சமுதாய மக்கள் திட்டமிட்டே இழிவுபடுத்தியுள்ளனர். நிஜ வாழ்வில் வில்லனான அந்தோணிசாமி என்ற கிறிஸ்தவரின் பெயரை மறைத்து அந்த கதாபாத்திரத்துக்கு குருமூர்த்தி பெயர், பின்னணியில் அக்னி குண்டம் காலண்டர், பேருந்து நிலைய நிழற்குடையில் ராமதாஸ் பெயர், வீரப்பன் புகைப்படம், பா.ம.க கரை வேட்டி, கொடிகம்பம் என அனைத்தும் வைக்கப்பட்டுள்ளது. ஒருவேளை உண்மையாகவே அச்சமுதாயத்தை சேர்ந்த ஒருவர் தவறு செய்து, படத்திலும் அவரை போலவே ஒருவரை வில்லனாக சித்தரித்து இருந்தால்கூட ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், படத்தில் உண்மை திரிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே சூர்யாவின் ‘வேல்’ திரைப்படத்திலும் வில்லன் வீட்டில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருமகனாரின் படம் வைக்கப்பட்டுள்ளது என்ற புதிய சர்ச்சையும் தற்போது கிளம்பியுள்ளது.

ஒரு படம் எடுப்பதென்றால் நடிகர் நடிகையர் மட்டுமல்ல, படத்தின் காலகட்டத்துக்கு ஏற்ப பின்னணி, உடை, மேக்கப், அக்காலகட்டத்து வீடு, வீட்டுக்குள் எந்த இடத்தில் எந்த சேர், சுவருக்கு என்ன பெயிண்ட், என்ன போட்டோ, அவுட்டோர் ஷூட்டிங்கில் அக்கால படங்களின் போஸ்டர் என அனைத்தும் முன்னதாகவே தெளிவாக தீர்மானிக்கப்படும். ஆனால், காலேண்டர் வைத்ததே தனக்கு தெரியாது என இயக்குனர் கூறியுள்ளார். இது அப்பட்டமான பொய்.

இப்படத்தில், ராஜாகண்ணு கைதாகும் தேதி 04.04.1995 என்று சூர்யா அட்டையில் குறித்து வைத்திருப்பார். காவல் அதிகாரி வீட்டில் காலண்டர் தேதி 06.04.1995. சூர்யா முதலில் தோன்றும் காட்சியில் திருவள்ளுவர் காலண்டரில் 09.04.1995. செங்கேணி வழக்கு தொடுக்க வக்கீல் அலுவலத்திற்கு வருகையில் 07.05.1995. சூர்யா வழக்கை எடுத்துக்கொள்ள முடிவு செய்வது 11.05.1995. சம்மன் கொடுப்பது 16.05.1995. இப்படி இத்தனை காட்சிகளிலும் காலண்டர்களில் தேதிகள் அனைத்தும் மிகச்சரியாக இருக்கும்போது, வில்லன் வீட்டில் அக்னி கலச காலண்டரும், அது லட்சுமி காலண்டராக மாற்றப்பட்டதும் முன்னதாகவே திட்டமிடப்பட்டதுதான்.

படம் வெற்றி பெற்றதாக மக்களுக்கு நேரடி நன்றி அறிக்கை, அன்புமணி ராமதாசின் கேள்விகளுக்கு தானே நேரடியாக திமிரான பதில் அறிக்கை வெளியிடுகிறார் நடிகர் சூர்யா. ஆனால், தன் தவறுகள் பூதாகாரமாகும்போது, திரைப் பிரபலங்கள், அரசியல்வாதிகள், ஊடகங்களின் பின்னால் ஒளிந்துகொண்டு, அந்த பழியை சுமக்க இயக்குனரை பலிகடா ஆக்குகிறார். நடிகர் சூர்யாவை நாம் கேட்பது 3 கேள்விகள்தான். எதற்காக குறிப்பிட்ட சமுதாயத்தை தவறாக சித்தரித்து படம் எடுத்தீர்கள், உண்மையான வில்லன் பெயரை கூற எது உங்களை தடுக்கிறது, அக்னி குண்ட காலண்டை எதற்கு லட்சுமி காலண்டராக மாற்றினீர்கள்? என்பதுதான். பதில் சொல்வாரா சூர்யா?

மதிமுகன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here