பாதுகாப்புப் படைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத்தின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்த ரஷ்ய தூதர் நிகோலாய் குடாஷேவ், மாஸ்கோ “மிக நெருங்கிய நண்பரை” இழந்துவிட்டதாக தெரிவித்தார்.
இந்தியா மற்றும் ரஷ்யா இருதரப்பு ராணுவ மேம்பாட்டிற்கு ராவத் முக்கிய பங்கு வகித்ததாக த்விட்டேரில் குடஷேவ் தெரிவித்துள்ளார்.
“ஹெலிகாப்டர் விபத்தில் ஜெனரல் பிபின் ராவத், திருமதி மதுலிகா ராவத் மற்றும் 11 அதிகாரிகளின் சோகமான மறைவு எங்களை ஆழ்ந்த வருத்தத்தில் ஆழ்த்தியது. இந்தியா தனது சிறந்த தேசபக்தர் மற்றும் அர்ப்பணிப்புள்ள ஒரு நாயகனை இழந்துவிட்டது.அவருக்கு பிரியா விடை அளிக்கிறோம்.” என்று குடாஷேவ் ட்வீட் செய்துள்ளார்.
பாதுகாப்புப் படைத் தலைவர் (சிடிஎஸ்) ஜெனரல் பிபின் ராவத்தின் மறைவுக்கு அமெரிக்கத் தூதரகம் புதன்கிழமை இரங்கல் தெரிவித்தது.
“தமிழகத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், ராவத் குடும்பத்தினருக்கும் அமெரிக்கத் தூதரகம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது” என்று இந்தியாவில் உள்ள அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
அறிக்கையின்படி, ராவத் அமெரிக்காவின் வலுவான நண்பராகவும் பங்காளியாகவும் இருந்தார், அமெரிக்க இராணுவத்துடன் இந்தியாவின் பாதுகாப்பு ஒத்துழைப்பின் முக்கிய விரிவாக்கத்தை மேற்பார்வையிட்டார்.
“இந்தியாவின் முதல் பாதுகாப்புப் படைத் தளபதியாக இருந்த ஜெனரல் ராவத், இந்திய ராணுவத்தில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றத்தை ஏற்படுத்தினார். அவர் அமெரிக்காவின் வலுவான நண்பராகவும் பங்காளியாகவும் இருந்தார்.செப்டம்பரில், அவர் இராணுவ முன்னேற்றங்கள் மற்றும் ஒத்த எண்ணம் கொண்ட நாடுகளுடன் நமது ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் பற்றி விவாதிக்க அமெரிக்கா முழுவதும் ஐந்து நாட்கள் பயணம் செய்தார். அவரது பணிகள் தொடரும்” என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் தப்பி பிழைத்த குரூப் கேப்டன் வருண் சிங் விரைவில் குணமடையவும் அமெரிக்க தூதரகம் வாழ்த்து தெரிவித்துள்ளது.
“நங்கள் இந்திய மக்கள் மற்றும் இந்திய இராணுவத்தை நினைவில் கொண்டுள்ளோம், மேலும் குரூப் கேப்டன் வருண் சிங் பூரண குணமடைய நாங்கள் பிரார்த்திக்கிறோம்,” என்றும் அது மேலும் கூறியுள்ளது.