பரமஹம்ச யோகானந்தா
இந்திய யோகியும் பல்லாயிரக்கணக்கான இந்தியர்களுக்கும் மேற்கத்தியர்களுக்கும் தியானம் மற்றும் கிரியா யோகத்தை படிப்பித்த குருவும் ஆவார். யோகோடா சத்சங்க சமூகம், இந்தியா என்ற நிறுவனத்தையும் தன்னுணர்தல் தோழமை என்ற நிறுவனத்தையும் இதற்காக நிறுவினார். அவரது தன்வாழ்க்கை நூலான, யோகியின் சுயசரிதை சிறந்த ஆன்மீக வழிகாட்டுதல் நூலாக விளங்குகின்றது. 21ஆம் நூற்றாண்டின் 100 சிறந்த ஆன்மீக நூல்களில் ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவிற்கு குடிபெயர்வு
யோகானந்தர் ஆத்திகக் குடும்பமொன்றில் தற்கால உத்தரப் பிரதேசத்திலுள்ள கோரக்பூரில்பிறந்தார். முகுந்தலால் கோஷ் என இளவயதில் அழைக்கப்பட்ட யோகானந்தர் தனது இளமைக்காலத்திலேயே ஆன்மீக விழிப்புணர்வு பெற்றவராக இருந்ததாக யோகானந்தரின் தம்பி, சனாந்தன் நினைவு கூறுகிறார். இளமையிலேயே இந்தியாவின் பல இந்து சாதுக்களையும் துறவிகளையும் அணுகி தனக்கான ஆன்மீகத் தேடலுக்கான குருவைத் தேடி வந்தார்.
1910இல் அவரது பதினேழாம் அகவையில் யோகானந்தரின் தேடல் முடிவுற்றது; குரு, சுவாமி யுக்தேசுவர் கிரியிடம் தனது ஆன்மீக வினாக்களுக்கான விடைகளைப் பெற்றார். பல நூற்றாண்டுகளாக அவருடன் தொடர்பு இருந்ததாக யோகானந்தர் உணர்ந்தார்.
குரு யுக்தேசுவர் யோகானந்தரை ஓர் சிறப்பான நோக்கத்திற்காக தம்மிடம் மகாவதார பாபா அனுப்பியதாக பின்னர் கூறினார்.
கலையில் இடைநிலைத் தேர்வை கொல்கத்தாவின் இசுக்காட்டிசு சர்ச்சு கல்லூரியில் முடித்த பிறகு சூன் 1915இல் தற்கால இளங்கலைப் பட்டப்படிப்பை ஒத்த பட்டப்படிப்பை (அக்காலத்தில் அது ஏ.பி எனப்பட்டது) செராம்பூர் கல்லூரியில் முடித்தார். செராம்பூரில் படித்ததால் இக்காலத்தில் அவர் அங்கிருந்த யுக்தேசுவரின் ஆசிரமம் சென்றுவர முடிந்தது. 1915இல் துறவித்துவம் பெற்றுக் கொண்டு சுவாமி யோகானந்த கிரி என்ற பெயரைச் சூடினார். 1917இல் நவீன கல்வி முறைகளுடன் யோகக் கலையையும் ஆன்மீக கொள்கைகளையும் இணைத்த கல்வித்திட்டத்துடன் மேற்கு வங்காளத்தின் திஹிகாவில் சிறுவர்களுக்கானப் பள்ளியைத் தொடங்கினார்.ஓராண்டிற்குப் பிறகு இந்தப் பள்ளி ராஞ்சிக்கு இடம் பெயர்ந்தது. இந்தப் பள்ளி பின்னாளில் யோகோடா சத்சங்க சமூகம், இந்தியாவாக பெயர் மாற்றம் பெற்றது; இது அமெரிக்க நிறுவனமான தன்னுணர்தல் தோழமையின் கிளையாக விளங்கியது.
1920இல், பாஸ்டனில் ஒழுங்குபடுத்தப்பட்ட சமய முற்போக்காளர்களின் பன்னாட்டு பேராயத்திற்கு பேராளராக ஐக்கிய அமெரிக்காவிற்குப் பயணமானார். அதே ஆண்டு தனது தன்னுணர்தல் தோழமை என்ற நிறுவனத்தையும் அங்கு நிறுவினார்; இந்தியாவின் தொன்மையான பழக்கவழக்கங்களையும் யோகக் கலையின் மெய்யியலையும் தியானத்தின் பாரம்பரியத்தையும் உலகெங்கும் பரப்பிட இந்த நிறுவனத்தை நிறுவினார்.அடுத்த பல்லாண்டுகளில் அமெரிக்க கிழக்குக் கடலோரத்தில் பல விரிவுரைகளையும் கற்பித்தலையும் மேற்கொண்டார். 1924இல் மற்ற கண்டங்களுக்கும் சென்று உரை நிகழ்த்தலானார். இவற்றைக் கேட்க வந்த பல்லாயிரவரில் மார்க் டுவெய்னின் மகள் கிளாரா கிளெமென்ட்சு உள்ளிட்ட பிரபலங்களும் அடங்குவர். 1925இல் தன்னுணர்தல் தோழமையின் கலிபோர்னியா மையத்தை இலாசு ஏஞ்செலசு நகரில் நிறுவினார். இதுவே பின்னாளில் அவரது வளர்ந்து வந்த பணிகளுக்கு மைய நிர்வாக மையமாக அமைந்தது. அமெரிக்காவில் யோகா ஆசிரியராக தனது வாழ்நாளில் பெரும்பகுதியை கழித்த முதல் இந்தியராக யோகானந்தர் விளங்கினார். 1920 முதல் 1952 வரை ஐக்கிய அமெரிக்காவில் வாழ்ந்திருந்தார்; 1935-36இல் இந்தியாவில் இருந்த தமது குருவைக் காணவும் மேற்கத்திய சமயவியலாளர்களான தெரசா நியூமன் போன்றவர்களைக் காணவும் ஓராண்டு காலம் அமெரிக்காவிற்கு வெளியே இருந்தார்..
இந்திய வருகை, 1935–1936
1935இல், தமது குரு யுக்தேசுவர் கிரியைக் காணவும் யோகோடா சத்சங் சமூகத்தை நிலைநிறுத்தவும் இந்தியா திரும்பினார். தனது இந்தியப் பயணத்தின்போது மோகன்தாசு கரம்சந்த் காந்தி, புகழ்பெற்ற இயற்பியலாளர் ச. வெ. இராமன், யுக்தேசுவர் கிரியின் சீடர்கள் ஆகியாரைச் சந்தித்தார். இந்தியாவில் இருக்கும்போது யுக்தேசுவர் இவருக்கு பரமஹம்ச என்ற பட்டத்தை வழங்கினார். 1936இல் யோகானந்தா கொல்கத்தாவில் இருந்தபோது யுக்தேசுவர் புரியில் மகாசமாதி அடைந்தார்.
மரணம்
தனது மரணத்திற்கு முந்தைய சில நாட்களாகவே யோகானந்தா தாம் இந்த உலகை விட்டுச் செல்லும் நேரம் வந்துவிட்டதாக குறிப்பிட்டு வந்தார்.
மார்ச்சு 7, 1952இல் இலாசு எஞ்செலசிற்கு வந்திருந்த இந்தியத் தூதர் பினய் ரஞ்சன் சென்னுக்கு பில்ட்மோர் தங்குவிடுதியில் கொடுக்கப்பட்ட விருந்தில் யோகானந்தர் தமது மனைவியுடன் கலந்து கொண்டார். விருந்தின் முடிவில் உலக அமைதிக்கும் மாந்த வளர்ச்சிக்கும் இந்தியா, அமெரிக்கா பங்கு குறித்தும் வருங்கால கூட்டுறவு குறித்தும் யோகானந்தர் பேசினார். உரையை முடிக்கும் தருவாயில் அவரது உடல் தரையில் சாய்ந்தது. அவரது சீடர்கள் அவர் மகாசமாதி அடைந்ததாக கூறினாலும். அலுவல்முறையாக மரணத்தின் காரணமாக இதயச் செயலிழப்பு குறிப்பிடப்பட்டது.
யோகானந்தரின் உடல் கிலென்டேல், கலிபோர்னியாவிலுள்ள பாரஸ்ட் லான் மெமோரியல் பார்க்கில் உள்ள மோசோலியத்தில் வைக்கப்பட்டுள்ளது. இது வருகையாளர்களுக்கு மூடப்பட்டிருந்தாலும் யோகானந்தரின் சமாதி அணுகக் கூடியதாக உள்ளது.