கட்டுரை-சுவாமி விவேகனந்தர் பிறந்த தினம்-ஜனவரி 11-தேசிய இளைஞர் தினம்

0
1133

        இந்தியாவின் மிகசிறந்த ஆன்மிகத் தலைவர், கல்வியாளர் ,வேதாந்தி,இந்தியாவின் தொலைநோக்கு சிந்தனையாளர், பரந்த சமூகக்கண்ணோட்டம் உடையவர்.ராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடர்,ஒரு சிறந்த சொற்பொழிவாளர் மற்றும் ராமகிருஷ்ண மடத்தின் நிறுவனரான சுவாமி விவேகனந்தரின் பிறந்த தினம் இன்று. இவரின் பிறந்த தினம் தேசிய இளைஞர் தினமாககொண்டாடப்படுகிறது.

குழந்தைப் பருவம்
        சுவாமி விவேகானந்தர் ஜனவரி 12, 1863 அன்று கல்கத்தாவில் ஒரு வங்காள க்குடும்பத்தில் பிறந்தார். அவரது இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா. இவரது தந்தை விஸ்வநாத் தத்தா, கல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்தார். துர்காசரண் தத்தா, நரேந்திரனின் தாத்தா, ஒரு சமஸ்கிருத மற்றும் பாரசீக அறிஞராக இருந்தார், அவர் தனது குடும்பத்தை விட்டு வெளியேறி 25 வயதில் துறவியானார். சுவாமி விவேகானந்தர் ஈஸ்வர் சந்திர வித்யாசாகர் நிறுவிய பள்ளியில் சேர்க்கப்பட்டார். மெட்ரிகுலேஷன் படிப்புக்குப் பிறகு, கொல்கத்தாவில் உள்ள பிரசிடென்சி கல்லூரியில் சேர்ந்து, தத்துவத்தில் எம்.ஏ. முடித்தார்.

குருவுடன் சந்திப்பு-துறவறம் மேற்கொள்ளுதல்
        நரேந்திரன் 1881ல் ஸ்ரீ ராமகிருஷ்ணரை சுரேந்தர்நாத் என்பவரின் வீட்டில் சந்தித்தார். ஆரம்பத்தில், சில நாட்கள், ஸ்ரீராமகிருஷ்ணர், ஒரு கணம் கூட, நரேந்தர்நாத்தை தன்னை விட்டுச்செல்ல அனுமதிக்கவில்லை. தனிமையில் இருக்கும் போது இருவரும் நன்றாக விவாதிப்பார்கள்.
ஸ்ரீ ராமகிருஷ்ணர் நரேந்திரனுக்கு தனது  பணியை மேற்கொள்ளும் பொறுப்பை வழங்க முடிவு செய்தார். ஒரு நாள் ஸ்ரீ ராமகிருஷ்ணர் ஒரு காகிதத்தில், “நரேந்திரர் மக்களை அறிவூட்டும் பணியைச் செய்வார்” என்று எழுதினார். சற்றே தயக்கத்துடன், “இதையெல்லாம் என்னால் செய்ய முடியாது” என்று பதிலளித்தார் நரேந்திரநாத். உடனே ஸ்ரீராமகிருஷ்ணர் மிகுந்த உறுதியுடன், “என்ன? முடியாது? உன் எலும்புகள் இந்தப் பணியைச் செய்யும்” என்றார். பின்னர், ஸ்ரீ ராமகிருஷ்ணர் நரேந்திரநாத்தை சன்யாஸ தீட்சை வழங்கி அவருக்கு சுவாமி விவேகானந்தர் என்று பெயரிட்டார்.
ஸ்ரீ ராமகிருஷ்ணர் ஆகஸ்ட் 16, 1886 அன்று தனது பூத உடலை விட்டார். மக்களுக்குச் சேவை செய்வதே மிகசிறந்த இறைவழிபாடு என்னும் தனது குருவின் உபதேசத்திற்கு ஏற்ப சுவாமி விவேகானந்தர் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் மரணத்திற்குப் பிறகு, ராமகிருஷ்ணரின் காசிப்பூர் மடத்தின் பொறுப்பை  ஏற்றுக்கொண்டார். சிறிது காலத்திற்கு பின் மடத்தை பாராநகருக்கு மாற்றினார். பின்னர் 1899 இல் மடம் பேலூருக்கு மாற்றப்பட்டது. இது இப்போது பேலூர் மடம் என்று அழைக்கப்படுகிறது.

விவேகானந்தரின் சுற்றுப்பயணம்
      விவேகானந்தர் 1888 ஆம் ஆண்டு பாரதத்தின் பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்யத் தொடங்கினார். சுமார் ஐந்து வருடங்கள் பாரதம் முழுவதும் பயணம் செய்து பல்வேறு வகையான மக்களை சந்தித்தார்.
பின்னர் ஜூலை 1893 இல் சிகாகோவிற்கு விஜயம் செய்தார். அந்த நேரத்தில், உலக சமயங்களின் பாராளுமன்றம் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் முதலில் தகுதிச் சான்று இல்லாததால் அவருக்கு பேச வாய்ப்பு அளிக்கப்படவில்லை. ஆனால் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜான் ஹென்றி ரைட்டின் உதவியால் அவருக்குப் பேசும் வாய்ப்பு கிடைத்தது.
செப்டம்பர் 11, 1893 இல், உலக சமயங்களின் பாராளுமன்றத்தில், இந்து தர்மம் குறித்து தனது முதல் சுருக்கமான உரையை அவர் நிகழ்த்தினார். அவர் தனது உரையை “அமெரிக்காவின் சகோதர,சகோதரிகளே” என்று தொடங்கினார். இந்த உரையால் அங்கு கூடியிருந்த ஏழாயிரம் பேரின் கைதட்டல் அவருக்கு கிடைத்தது. உலக சமயங்களின் பாராளுமன்றத்தில் அவர் ஆற்றிய உரைகள் அவரை , ‘மேற்கத்திய உலகிற்கு பாரதிய ஞானத்தின் தூதுவராக அடையாளம் காட்டின.
சிகாகோவில் நிகழ்த்திய உரைக்குப் பிறகு, அவர் உலகம் முழுவதும் பல உரைகளை வழங்கினார் மற்றும் சகோதரி நிவேதிதா உட்பட பலரைச் சந்தித்தார். உலக அரங்கில் இந்து மதத்தின் புகழைத் தன் சொற்பொழிவால் நிலைநிறுத்திய விவேகானந்தர், அமெரிக்கப் பயணத்தை முடித்து விட்டு இலங்கை மார்க்கமாக 26.01.1897 அன்று பாம்பன் பகுதியில் வந்திறங்கினார். அவருக்கு அன்றைய இராமநாதபுரம் சமஸ்தான மன்னர் பாஸ்கர சேதுபதி  மிகச் சிறப்பான வரவேற்பை அளித்தார். இந்தியா திரும்பிய பிறகு பல்வேறு இடங்களில் உரை நிகழ்த்தினர். அவர் 1897 ஆம் ஆண்டு மே 1 ஆம் தேதி ராமகிருஷ்ணா மிஷனை நிறுவினார். 1899 ஜனவரி முதல் 1900 டிசம்பர் வரை இரண்டாம் முறையாக மேல்நாட்டுப் பயணம் மேற்கொண்டார்.

மறைவு
    1902 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் நாள், தனது 39ஆம் வயதில் பேலூரில் விவேகானந்தர் காலமானார். அன்று அவர் நிறுவிய இராமகிருஷ்ண மிஷன் மற்றும் மடம் இன்று உலகம் முழுவதும் கிளைகள் பரவி செயல்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here