தைப்பூசம்-இராமலிங்க அடிகள் சித்தி அடைந்த தினம்

0
1422

 

திருவருட் பிரகாச வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார்  (அக்டோபர் 51823 – ஜனவரி 301874) ஓர் ஆன்மீகவாதி ஆவார். இவர் சத்திய ஞான சபையை நிறுவியவர். “வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம், வாடினேன்” என்று பாடியவர் இவர். திருவருட்பிரகாச வள்ளலார் என்ற சிறப்பு பெயர் பெற்றவர். கடவுள் ஒருவரே என்ற கருத்தை வலியுறுத்தியவர். இவர் சித்தி அடைந்த தினம் தைப்பூசம்.

     சாதி சமய வேறுபாட்டுக்கு எதிரான தமது நிலைப்பாடு காரணமாக, சமுதாயத்தின் பழைமைப் பற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்.

பிறப்பு

    இவர் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து 10 மைல் தொலைவில் உள்ள மருதூரில் புரட்டாசி 19 (05.10.1823)இல் கருணீகர் குலத்தில் பிறந்தவர். பெற்றோர் இராமையாபிள்ளை, சின்னம்மையார். இவரோடு சபாபதி, பரசுராமன், உண்ணாமுலை, சுந்தராம்பாள் ஆகிய நால்வரும் உடன்பிறந்தவர்கள். இராமலிங்கர் பிறந்த ஆறாம் மாதத்திலேயே தந்தையை இழந்தார். தாயார் குழந்தைகளோடு பொன்னேரி சென்று வாழ்ந்தார். பின்னர் சென்னையில் ஏழுகிணறு பகுதி 39, வீராசாமி பிள்ளை தெருவில் உள்ள வீட்டில் குடியேறினார். அண்ணன் சபாபதி சமயச் சொற்பொழிவு செய்து வந்தார்.

கல்வி

     இவரின் தமையனார் சிதம்பரம் சபாபதி பிள்ளை, தன் தம்பி இராமலிங்க சுவாமிகள் பெரிய அளவில் படிக்க வைத்து அவரை முன்னேற வைக்கவேண்டும் என்று விரும்பினார். ஆனால், இராமலிங்க சுவாமிகள் அவர்களுக்கோ கல்வியில் நாட்டம் செல்லவில்லை. ஆன்மிகத்தில் ஈடுபாடு காட்டினார். அவரை நல்வழிப்படுத்துவதற்காக, தன் குருநாதரான காஞ்சிபுரம் மகாவித்துவான் சபாபதி முதலியாரிடம் கல்வி பயில அனுப்பி வைத்தார் சிதம்பரம் சபாபதி பிள்ளை.

இராமலிங்க சுவாமிகள் அங்கும் சரியாக படிக்கவில்லை. வகுப்பு முடிந்ததும் கந்தகோட்டம் சென்று முருகனை வணங்குவார். ஒருநாள் இராமலிங்க சுவாமிகளை கவனிப்பதற்காக கந்தகோட்டம் முருகன் கோயிலுக்குச் சென்றார் காஞ்சிபுரம் மகாவித்துவான் சபாபதி முதலியார். முருகன் சன்னதி முன்பு அமர்ந்திருந்த இராமலிங்க சுவாமிகள்,

“ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும், உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்”

என்று மனமுருக பாடிக்கொண்டிருந்தார். பெரும் பொருளுடனான அப்பாடலை இராமலிங்க சுவாமிகள் பாடுவதைக் கண்ட காஞ்சிபுரம் மகாவித்துவான் சபாபதி முதலியார் மெய்மறந்து நின்று கண்ணீரே வடித்துவிட்டார்.

இராமலிங்க சுவாமிகள் அவரின் அண்ணன் சிதம்பரம் சபாபதி பிள்ளையிடம், உனது தம்பி ஒரு தெய்வப்பிறவி. அவனுக்கு சாதாரண உலகியல் கல்வி தேவையில்லை. எனவே, இனிமேலும் அவனுக்கு கற்பிக்க தன்னால் முடியாது, என்று சொல்லிவிட்டார்.அதன் பிறகு இராமலிங்க அடிகளார் தன இறைபணியில் ஆழ்ந்து பயணிக்க தொடங்கி விட்டார்.

பசியாற்றல்

     இராமலிங்க அடிகள் 23–5–1867 அன்று வடலூர் மக்களிடம் இருந்து 80 காணி நிலம் பெற்று தருமசாலையை தொடங்கினார். இந்த தருமசாலைக்கு வந்தவர்களுக்கு 3 வேளையும் உணவு வழங்கப்பட்டது. தற்போது தருமசாலைக்கான உணவுப்பொருட்களை தமிழக அரசு குறைந்த விலைக்கு வழங்கி வருகிறது என்பது பாராட்டுக்கு உரியதாகும். மக்களின் மிகுந்த துயரங்களுள் ஒன்றான பசியைப் போக்கிட வள்ளலார் வழி வகுத்தார். இன்றளவும் வள்ளலார் பெயரால் லட்சக்கணக்கான மக்களுக்குப் பசியாற்றப்படுகிறது. வடலூரில் தலைமை இடம் இருந்தாலும், உலகமெங்கும் அவரது கொள்கையைப் பின்பற்றுகின்றவர்கள் பசியாற்றுகிறார்கள்.

சத்திய ஞான சபை

    எல்லா மதங்களிலும் உள்ள உண்மை ஒன்றே என்பதை குறிக்கும் வண்ணம் இவர் தோற்றுவித்த மார்கத்திற்கு சர்வ சமய சமரச சுத்த சன்மார்க்கம் என்று பெயரிட்டார். உண்மையான ஞானி என்பதால் சாதிய பாகுபாடுகளை சாடினார் அதனால் உயர் சாதி இந்துக்களின் எதிர்ப்பை சம்பாதித்தார், இருப்பினும் தொடர்ந்து தன் வழியே பயணப்பட்டார்.

    தன் வாழ்வின் பெரும்பகுதியைச் சென்னையில் கழித்த இவர், நவீன சமுதாயங்களின் பிரச்சினைகளை உணர்ந்திருந்தார். அனைத்துச் சமய நல்லிணக்கத்திற்காக சன்மார்க்க சங்கத்தை நிறுவினார். அறிவுநெறி விளங்க சிதம்பரம் அருகே உள்ள வடலூரில் சத்திய ஞானசபையை அமைத்தார். இத்தகு உயரிய நோக்கங்களுக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்துப் பணியாற்றினார். 1867ஆம் ஆண்டில் மக்களின் பசித்துயர் போக்க சத்திய தரும சாலையையும் நிறுவினார். அவர் வாழ்ந்த காலத்தில் அவருடைய சிந்தனைகள் மிகவும் முற்போக்குடையதாகக் கருதப்பட்டாலும், தற்பொழுது உலகெங்கும் அவருடைய சிந்தனைகளுக்கு ஒத்த கொள்கைகள் புரிந்துகொள்ளப்பட்டு பின்பற்றப்படுகின்றன.

திரு அருட்பா

     இவர் பாடிய ஆறாயிரம் பாடல்களின் திரட்டு, திருவருட்பா என்று அழைக்கப்படுகிறது. இது ஆறு திருமுறைகளாக பகுக்கப்பட்டு உள்ளது. திருவருட்பா, முதலில் இராமலிங்கஅடிகளின் தலைமைச் சீடர் தொழுவூர் வேலாயுதனாரால் நான்கு திருமுறைகளாக வெளியிடப்பட்டன. பின்னர் ஐந்தாம், ஆறாம் திருமுறைகள் வெளியிடப்பட்டன. முன்னாள் தமிழக அறநிலையத்துறை ஆணையாளர் பாலகிருஷ்ணன், இராமலிங்கரின் உரைநடை, கடிதங்கள் முதலியவற்றைத் தனி நூலாகத் தொகுத்து வெளியிட்டார். பின்னர் ஊரன் அடிகளும் காலமுறைப் பதிப்பு வெளியிட்டுள்ளார்.

சித்தி அடைதல்

    வள்ளலார் ஜனவரி 301874 அன்று தைப்பூச தினத்தில் சித்தி அடைந்து ஒளி வடிவாகினார்.

வள்ளலாரின் பன்முக ஆற்றல்கள்

  1. அருளாசிரியர்
  2. இதழாசிரியர்
  3. இறையன்பர்
  4. உரையாசிரியர்
  5. சமூக சீர்திருத்தவாதி
  6. சித்தமருத்துவர்
  7. சிறந்த சொற்பொழிவாளர்
  8. ஞானாசிரியர்
  9. தீர்க்கதரிசி
  10. நூலாசிரியர்
  11. பசிப் பிணி போக்கிய அருளாளர்
  12. பதிப்பாசிரியர்
  13. போதகாசிரியர்
  14. மொழி ஆய்வாளர் (தமிழ்)
  15. பண்பாளர்

வள்ளலாரின் கோட்பாடுகள்

    சாகாக்கல்வி,ஜீவகாருண்யம்

வள்ளலாரின் கொள்கைகள்

  1. இறந்தவர்களை எரிக்கக் கூடாது.சமாதி வைத்தல் வேண்டும்
  2. எதிலும் பொது நோக்கம் வேண்டும்
  3. எந்தஉயிரையும் கொல்லக்கூடாது
  4. எல்லா உயிர்களும் நமக்கு உறவுகளே. அவற்றைத் துன்புறுத்தக்கூடாது
  5. சிறு தெய்வ வழிபாடு கூடாது. அவற்றின் பெயரால்பலி இடுதலும் கூடாது
  6. பசித்தவர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடு கருதாது உணவளித்தல் வேண்டும்
  7. புலால்உணவு உண்ணக்கூடாது
  8. கடவுள்ஒருவரே. அவர் அருட்பெருஞ்சோதி ஆண்டவர்
  9. சாதிமதம், இனம், மொழிமுதலிய வேறுபாடு கூடாது
  10. மத வெறி கூடாது.

வள்ளலாரின் பதிப்பித்தவை

  1. சின்மய தீபிகை
  2. ஒழிவிலொடுக்கம்
  3. தொண்டைமண்டல சதகம்

இயற்றிய உரைநடை

  1. மனுமுறைகண்ட வாசகம்
  2. ஜீவகாருண்ய ஒழுக்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here