தமிழகத்தை சேர்ந்த 17 வயது மாணவி தற்கொலை செய்த விவகாரம் தொடர்பாக நீதி கேட்டு ஏ.பி.வி.பி. தொண்டர்கள் டில்லியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழகத்தின் தஞ்சாவூர் அருகே, மைக்கேல்பட்டி துாய இருதய மேல்நிலைப் பள்ளியில் படித்த, அரியலுாரை சேர்ந்த 17 வயது மாணவி பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவரை மதம் மாறக் கோரி பள்ளி நிர்வாகம் வற்புறுத்தியதால் மாணவி தற்கொலை செய்ததாக புகார் எழுந்தது.
இந்த வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.இந்நிலையில், ஏ.பி.வி.பி., எனப்படும் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பை சேர்ந்த தொண்டர்கள், டில்லியில் உள்ள பழைய தமிழ்நாடு இல்லம் முன் நேற்று அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏ.பி.வி.பி.,யின் தேசிய பொது செயலர் நிதி திரிபாதி தலைமையில் போராட்டம் நடந்தது. டில்லி போலீஸ் மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.