பார்லிமென்டில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கிறது. தி.மு.க., – எம்.பி.,க்களிடையே ஒற்றுமை இல்லை என்பது, சபையில் அவர்கள் நடந்து கொள்ளும் விதத்தின் வாயிலாக தெரிய வருகிறது. தி.மு.க.,வின் பார்லி., குழு தலைவர் லோக்சபாவில் ஆங்கிலத்தில் பேசும் போது, நிறைய பேப்பர்களை கையில் வைத்துக் கொண்டு சுமாராகத் தான் பேசுவார். அவர் பேசும் போது, அவருக்குப் பின்னால் உட்கார்ந்திருக்கும் தி.மு.க., குடும்ப எம்.பி., தன் சக எம்.பி.,க்களிடம், பார்லி., குழு தலைவரின் ஆங்கில பேச்சைப் பற்றி கிண்டலாக ‘கமென்ட்’ அடிக்கிறாராம். இது, சில இளம் தி.மு.க., – எம்.பி.,க்களுக்கு பிடிக்கவில்லை
.இன்னொரு பக்கம் ஐந்து ‘சீனியர்’ தி.மு.க., – எம்.பி.,க்கள், தங்கள் கட்சி தலைமையால் ஓரங்கட்டப்பட்டிருப்பதாக கவலைப்படுகின்றனர். இந்த ஐவரும் தனித்தனியாக லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவிற்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில், ‘நாங்கள் இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்க முடியாது; காரணம், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பிரசாரம் செய்ய வேண்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளனராம். அதோடு தங்களுக்கு அடுத்த பார்லி., தேர்தலில் சீட் கிடைக்காது என்பதால், தங்கள் குடும்ப உறுப்பினர்களை எம்.பி.,யாக்கி விட வேண்டும் என்பதிலும் அவர்கள் தீவிரமாக உள்ளனர்.