திருப்பூர் மாவட்டத்தில், சிறுபான்மையினர் நல ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தலைமையில், அமைச்சர், கலெக்டர் பங்கேற்ற கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது. சிறுபான்மையின மக்களுக்கு உரிமை இருப்பது போல், கடமைகளும் உள்ளன. மாற்று சமூகத்தினருடன் இணைந்து அவர்களை வாழ வைக்க வேண்டும்; நாமும் அவர்களால் வாழ வேண்டும். பிற சமூக மக்களுக்கும் உதவிகளை செய்து, மனிதநேயம் மிகுந்த சமுதாயமாக மாற்ற வேண்டும். ஜாதி, மதத்தை மறந்து, எல்லாரும் தமிழர்களாக ஒன்றிணைந்து, எழுந்து நிற்க வேண்டும்.
அரசு புறம்போக்கு நிலத்தில், சர்ச், மசூதி கட்டி, அனுமதி கேட்டால் கிடைக்காது; தனியார் இடத்திலும், கட்டி முடித்த பின் அனுமதி கேட்டு அரசை சங்கடப்படுத்தக் கூடாது.கலெக்டரிடம் முறையான அனுமதி பெற்ற பின் கட்ட வேண்டும்.மற்ற மதத்தினர் வசிக்கும் பகுதிகளுக்கு சென்று, மத பிரசாரம் செய்வது போன்ற பணிகளை தவிர்க்க வேண்டும். சிறுபான்மையின மக்களின் கோரிக்கையின் மீது, மாவட்ட நிர்வாகம், 30 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறுபான்மையினர் நல ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்தார்.