ஒரு நாடு வளம்பொருந்திய நாடோ; வறுமை நிலவும் நாடோ அது அந்நாட்டிற்குப் பெருமை சேர்க்காது. அந்த நாட்டு மக்கள் தேசபக்தியோடும் தேசிய சிந்தனையோடும் ஒன்றிணைந்து வாழ்ந்து தேசத்திற்காகப் பாடுபடுகிறார்களா? ஆமெனில்தான் அந்நாட்டிற்கு உயர்வு ஏற்படும் என ஔவையார் கூறுகிறார்.
அப்படி நம் தேசம் உயர்ந்த நிலைக்கு வரவும் நமது நாட்டு மக்களிடையே தேசத்திற்கான தியாகம், தேச சேவை செய்வது போன்ற சிறந்த நற்குணங்களை உருவாக்கக்கூடிய அமைப்புதான் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம். அந்த அமைப்பை 1925ல் துவக்கியவர் டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவார். யுகாதி திருநாளில் அவதரித்த ஹெட்கேவார் சிறு வயது முதலே தேசபக்தி, தெய்வபக்தி வாய்ந்தவராக ஒரு முன்னுதாரண வாழ்க்கை வாழ்ந்தவர்.
ஆங்கிலேயனை வெளியேற்றுவதற்கானப் போராட்டத்தில் ஈடுபட்டது காங்கிரஸ். ஆங்கிலேயன் வெளியேறினால் தேசத்தில் பாலாறும் தேனாறும் ஓடும் என்று சொல்லி மக்களிடத்திலே கற்பனையை விதைத்தனர் காங்கிரஸார். மாறாக, ஏன் முகலாயர்களும் ஆங்கிலேயர்களும் நம்மை அடிமைப்படுத்தினார்கள், நமது தேசம் ஏன் அடிமையானது என்று தீர்க்கமாக சிந்தித்தார் ஹெட்கேவார். வல்லமையில், வாழ்க்கை முறை, கலாச்சாரத்தில் உச்சத்தைத் தொட்ட நாம் அடிமையானதற்குக் காரணம் நம்மிடத்திலே இருந்த ஒற்றுமையின்மை. அந்த பலவீனத்தைப் போக்கி மீண்டும் மக்களிடத்திலே ஒற்றுமையை கொண்டு வரவும் தேசத்தின் பெருமையை மக்கள் உணரவும் ஆர்.எஸ்.எஸ் என்ற மாபெரும் இயக்கத்தைத் தோற்றுவித்தார். அந்த அமைப்பை உருவாக்குவதற்காகத் தன்னுடைய வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தார்.
பலமான உடற்கட்டு, கண்களில் அசாதாரண ஒளி, பெரிய மீசை என்று முரட்டுத் தோற்றத்தைக் கொண்டவராக இருந்தாலும், அணுகுவதற்கு எளிமையான, பழகுவதற்கு இனிய மனிதராக, சாந்தமும், பண்பும், பணிவும் மிளிர வாழ்ந்தவர் ஹெட்கேவார். மருத்துவப் படிப்பை முடித்தபிறகு தன் வாழ்க்கையை தேசத்திற்காக அர்ப்பணித்தவர். தன் வாழ்க்கையில் பல்வேறு இன்னல்கள் ஏற்பட்டபோதும் புன்சிரிப்போடும் அமைதியான முகத்தோடும் அனைவரையும் அரவணைத்து சங்கத்தை உருவாக்கி மக்கள் மனதிலிருந்து அடிமைத்தனத்தை நீக்கி, சமுதாயத்திற்கு வழிகாட்டக்கூடிய ஒரு தலைவராக வாழ்வாங்கு வாழ்விக்க வந்த ஒரு மகான் அவர்.
தேச மக்களிடையே ஒற்றுமை எனும் வெளிச்சத்தை உருவாக்கி, மக்கள் வல்லவர்களாக நல்லவர்களாக உருவாவதற்காக முன்னுதாரணமான வாழ்க்கை வாழ்வதற்காகவும் அவர் நமக்களித்த பொக்கிஷம்தான் ‘ஷாகா’. அந்த உத்தம புருஷனுடைய பிறந்த நாளில் அவர் தொடங்கி, வாழ்ந்து காட்டிய பாதையில் வாழ்வதன் மூலமாக மீண்டும் இந்த பாரதத்தை மகோன்னத நிலைக்கு கொண்டு செல்ல நாம் அவர் பிறந்த இந்த நன்னாளிலே உறுதி ஏற்போம்.