பாரத சுதந்திரத்தின் 75வது ஆண்டு கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, மத்திய கலாச்சார அமைச்சகம் நாடு முழுவதும் உள்ள முக்கிய கோயில்களின் மெய்நிகர் தரிசனத்தை செயல்படுத்தும் டெம்பிள் 360 (Temple 360) என்ற இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஹிந்து புத்தாண்டு கொண்டாட்டங்களையொட்டி, டெல்லியில் உள்ள இந்திரா காந்தி தேசிய கலை மையத்தில் கலாச்சார அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில், கலாச்சாரம் மற்றும் வெளியுறவுத் துறை இணையமைச்சர் மீனாட்சி லேகி இந்த இணையதளத்தை தொடங்கி வைத்தார். இவ்விழாவில் உரையாற்றிய லேகி, “பல்வேறு காரணங்களால் வரலாற்றுச் சிறப்புமிக்க புனிதத் தலங்களுக்கு நேரில் செல்ல முடியாதவர்கள், அதனை வீட்டில் இருந்தே தரிசிக்க இந்த இணையதளம் உதவும். இந்த தளத்தின் மூலம் மக்கள் இ தர்ஷன், இ பிரசாத் மற்றும் இ ஆரத்தி, இ நன்கொடை ஆகியவற்றைப் பார்க்கலாம், பங்கேற்கலாம். இது அனைவரின் வாழ்க்கையையும் வசதியாக்குகிறது; மக்களை இணைக்கிறது’ என்றார்.