– தமிழில்: ஸ்ரீ (PSJ) –
நேஷனல் ஹெரால்டு என்பது ஜவஹர்லால் நேருவால் 1938ல் பல சுதந்திரப் போராட்ட வீரர்களுடன் இணைந்து உருவாக்கப்பட்ட செய்தி நிறுவனம். இந்த நிறுவனம் எந்த ஒரு தனி நபருக்கும் சொந்தமானதல்ல. அசோசியேடட் ஜர்னல்ஸ் லிமிடெட் (AJL) நிறுவனத்துக்குச் சொந்தமானது. 2008ல் 90 கோடி ரூபாய் கடன் காரணமாக, இந்த செய்தி நிறுவனம் மூடப்பட்டது.
இதற்கிடையில், யங் இந்தியன் லிமிடெட் (YIL) என்ற நிறுவனம் 2010இல் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தியை இயக்குனராக கொண்டு உருவாக்கப்பட்டது. இந்த நிறுவனத்தில் 70 சதவீத பங்குகளை ராகுல் காந்தியும், சோனியா காந்தியும் வைத்துள்ளனர். மீதம் 24%, காங்கிரசின் பிற தலைவர்களான மோதிலால் வோரா மற்றும் ஆஸ்கர் பெர்னாண்டஸ்க்கு சொந்தமானது. இந்த நிறுவனம், வேறு எந்த வணிக செயல்பாடுகளையும் கொண்டிருக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதாவது, அசோசியேடட் ஜர்னல் நிறுவனத்தை கையகப்படுத்துவதற்காகவே ஆரம்பிக்கப்பட்டது போல.
அசோசியேடட் ஜர்னல்ஸ் லிமிடெட் (AJL) நிறுவனம் 2010ல் கொண்டிருந்த 1057 பங்குதாரர்களின் பங்குகளை 2011இல் யங் இந்தியன் லிமிடெட்டுக்கு மாற்றியது. காங்கிரஸ் நிர்வாகிகளே AJLஇல் இயக்குநர்களாகவும், YILஇல் பெரும்பான்மை பங்குதாரர்களாகவும் இருந்தனர். அதாவது, விற்பவர்களும் அவர்களே; வாங்குபவர்களும் அவர்களே. அதனால், AJLஇன் மற்ற பங்குதாரர்களுக்கு எந்த பங்கும் இல்லாமல் அனைத்து முடிவுகளும் எடுக்கப்பட்டன.
நேஷனல் ஹெரால்டு நாளிதழின் வெளியீட்டாளரான AJL நிறுவனத்திற்கு 1982ஆம் ஆண்டு ஹரியானா காங்கிரஸ் அரசு நிலம் ஒதுக்கியது. ஆனால் குறித்த காலத்திற்குள் கட்டுமானப் பணிகள் முடிக்கப்படாததால், 1992இல் நிலத்தை திரும்ப வாங்கிக் கொண்டது. ஹரியானா அரசு, ஏஜேஎல் நிறுவனத்துக்கு நிலம் ஒதுக்கியதே சட்டவிரோதமானது என CBI / IT கண்டறிந்தது. போதாத குறைக்கு, சட்டத்தை மீறி, 1982 விலையிலேயே AJLக்கு நிலத்தை மீண்டும் தாரை வார்த்தது அரசு. அதனால், அப்போதைய காங்கிரஸ் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா மற்றும் பிற அதிகாரிகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது
அசோசியேடட் ஜர்னல்ஸ் லிமிடெட் (ஏஜேஎல்) நிறுவனத்தை யங் இந்தியன் பிரைவேட் லிமிடெட் (ஒய்ஐஎல்) சொற்ப தொகைக்கு கையகப்படுத்தியதில், காங்கிரஸ் தலைவர்கள் மோசடி மற்றும் நம்பிக்கை மீறலில் ஈடுபட்டதாக, பாஜக தலைவர் சுப்பிரமணிய சாமி 2012-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார்.
காங்கிரஸ் கட்சிக்கு AJL செலுத்த வேண்டிய ரூ. 90.25 கோடியை வசூலிக்கும் உரிமையைப் பெறுவதற்கு YIL வெறும் ரூ. 50 லட்சத்தை செலுத்தியதாகவும் சுவாமி குற்றம் சாட்டினார்; செய்தித்தாள் தொடங்குவதற்கு கடனாக அந்தத் தொகை முன்பு கொடுக்கப்பட்டது. AJL க்கு வழங்கப்பட்ட கடனே “சட்டவிரோதமானது” என்றும், அது கட்சி நிதியில் இருந்து எடுக்கப்பட்டது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
இந்த வழக்கில் பணமோசடி நடந்துள்ளதா என 2014-ம் ஆண்டு அமலாக்கத் துறை விசாரிக்கத் துவங்கியது. காங்கிரஸ் கட்சியோ, “நிறுவனத்தின் பங்குகளை மாற்றுவதற்கான “வெறும் வணிகப் பரிவர்த்தனை” என்பதால், பரிவர்த்தனையில் “சட்டவிரோதமில்லை” என்று கூறியது
ஜூன் 26, 2014 அன்று, சோனியா காந்தி, ராகுல் காந்தி, மோதிலால் வோரா, ஆஸ்கார் பெர்னாண்டஸ், சுமன் துபே மற்றும் சாம் பிட்ரோடா ஆகியோருக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. சோனியா மற்றும் ராகுல் காந்திக்கு டிசம்பர் 19, 2015 அன்று விசாரணை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
வழக்கையே ரத்து செய்யக் கோரி காங்கிரஸ் தலைவர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை உயர் நீதிமன்ற பெஞ்ச் நிராகரித்தது, இந்த வழக்கில் பூர்வாங்க முகாந்திரம் உள்ளதை நீதிமன்றம் ஏற்றது. ஏஜேஎல் நிறுவனத்திற்கு காங்கிரஸ் கட்சி வழங்கிய ஆரம்பக் கடனின் சட்டபூர்வமான தன்மை குறித்தும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. AJLக்கு கடன் வழங்குவதற்கான காரணங்கள், YIL க்கு கடனை மாற்றிய முறை மற்றும் தொடர்புடைய பரிவர்த்தனைகளை விசாரணை நீதிமன்றம் நுணுக்கமாக ஆராய வேண்டும் என்று உயர் நீதிமன்றம் கூறியது
2016ஆம் ஆண்டில், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேருக்கும் (சோனியா, ராகுல், மோதிலால் வோரா, ஆஸ்கார் பெர்னாண்டஸ் மற்றும் சுமன் துபே) நேரில் ஆஜராவதில் உச்ச நீதிமன்றம் விலக்கு அளித்தது.
ஜனவரி 21, 2016 அன்று, மூன்று நாளிதழ்களை மீண்டும் நடத்த AJL முடிவு செய்தது. ஹரியானா ஊழல் தடுப்பு அமைப்பு, பஞ்ச்குலாவில் உள்ள ஏஜேஎல் நிலத்தை மறு ஒதுக்கீடு செய்ததில் மோசடி மற்றும் ஊழல் செய்ததாக ஹூடா மீது மே 2016இல் வழக்குப் பதிவு செய்தது.
AJLஇன் சொத்தை கையகப்படுத்தும் முழு செயல்முறையும் YILஐ இணைத்த நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் எந்த வரியும் முத்திரைத் தீர்வையும் செலுத்தாமல் முடிக்கப்பட்டது இன்னும் ஆச்சரியமானது.
27.12.2017 தேதியிட்ட இந்த பரிவர்த்தனையின் மூலம் காந்தி குடும்பத்திற்கு 414.40 கோடி ரூபாய் கிடைத்தது. அதற்கு ரூ.249.15 கோடி வரி விதித்தது வருமான வரித்துறை. வருமான வரி நடவடிக்கைகள் மற்றும் மதிப்பீட்டு உத்தரவை காந்தி குடும்பத்தினர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு மூலம் இரண்டு முறை எதிர்த்தனர். இரண்டு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.
Young Indian நிறுவனம் CIT(A) இன் உத்தரவை எதிர்த்து, வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் (ITAT) மனு தாக்கல் செய்தது. இந்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதியிட்ட உத்தரவின்படி யங் இந்தியன் நிறுவனத்தின் இரண்டாவது மேல்முறையீடும் ITAT ஆல் தள்ளுபடி செய்யப்பட்டது. இரண்டாவது முறை மேல்முறையீட்டு ஆணையத்தின் உத்தரவில், இந்த AJL பரிவர்த்தனை மூலம் காந்தி குடும்பத்திற்கு 395 கோடி ரூபாய் ஆதாயம் கிடைத்ததாகவும் கூறியுள்ளது
இவற்றின் அடிப்படையில், நேஷனல் ஹெரால்டு ஊழலில் காந்தி குடும்பத்தினர் மீது குற்றச்சாட்டுகள் இருப்பதாக சொல்லக் கூடாது. ஏனெனில் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் ஏற்கனவே நிரூபிக்கப்பட்டுவிட்டன.