கோவை, செல்வபுரத்தை சேர்ந்த ஹிந்து வாலிபரான அருண், திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த முஸ்லிம் பெண்ணான சஹானாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தீவிர இஸ்லாமிய அமைப்பான பி.எப்.ஐயின் அரசியல் முகமான எஸ்.டி.பி.ஐ கட்சியை சேர்ந்தவர் சஹானாவின் தாயான நூர்நிஷா. இவர், அருணை முஸ்லிமாக மாற கட்டாயப்படுத்தினார். அவர் மதம் மாற மறுத்துவிட்டார். இதற்கு அருணின் தந்தை தான் காரணம் என்று கருதி அவரை கொல்ல திட்டமிட்டனர். கோவையில் அவர்கள் தங்கியிருந்த வீட்டின் அருகே ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த திருச்சியை சேர்ந்த சதாம் உசேன் மற்றும் இம்ரான்கான், உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த ராம்வீர், சென்னை கொடுங்கையூரை சேர்ந்த பக்ருதீன், பெருந்துறையை சேர்ந்த முகமது அலி ஜின்னா ஆகிய ஐந்து பயங்கரவாதிகளை பொதுமக்களின் புகாரின் பேரில் காவல்துறை கைது செய்தது. விசாரணையில், சதித்திட்டத்திற்கு மூளையாக இருந்த பெண்ணின் தாய் திருவாரூர் நுார்நிஷா கடந்த ஏப்ரல் 12ல் கைது செய்யப்பட்டார். இவர்கள் மீது சட்டவிரோத தடுப்பு சட்டத்தின் கீழ் (உபா) வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதில், கூட்டுசதி உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளும் சேர்க்கப்பட்டது. இவ்வழக்கை சென்னை தேசிய புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ.) மாற்றுமாறு கோவை நகர காவல் துறை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளது. உள்துறை அமைச்சகத்தின் உத்தரவுக்கு பின்னர் இவ்வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்படும் என்று தெரிகிறது.